Pages

Tuesday, May 11, 2010

ரஹ்மான் இசையமைத்த செம்மொழி மாநாட்டுப் பாடல் 15-ம் தேதி வெளியீடு!




சென்னை: கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் [^] கருணாநிதி [^] எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'செம்மொழி மாநாட்டு மைய நோக்குப் பாடல்' சி.டி. சென்னையில் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது.

உலகத் தமிழ்செம்மொழி மாநாடு கோவையில் அடுத்த மாதம் (ஜுன்) 23-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

செம்மொழி மாநாட்டை மையப்படுத்தி மைய நோக்கு பாடல் (தீம் சாங்) உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை வரும் மே 15-ந் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடுகிறார் முதல்வர் கருணாநிதி.

இசையமைப்பாளர் எல்.சுப்பிரமணியம் சி.டி.யை பெற்றுக்கொள்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் [^] கவுதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட கனிமொழி

இந்தப் பாடல் வெளியிடப்பட உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சினிமா ஆர்ட் டைரக்டர் ராஜீவன் பிரமாண்டமாக செட் அமைத்துள்ளார்.

மேடை அமைப்பு மற்றும் பணிகளை கவிஞர் கனிமொழி எம்.பி. நேற்று ஆய்வு செய்தார்.

பிறப்பொக்கும்...

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அந்தப் பாடல்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -

உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம்

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம்மொழி நம் மொழி - அதுவே

செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே.

No comments:

Post a Comment