Pages

Tuesday, July 27, 2010

இலங்கை அதிரடி ரன் குவிப்பு - பரணவிதனா, சங்ககரா சதம்

கொழும்பு: இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளிக்க, கொழும்பு டெஸ்டில் அதிரடியாக ஆடி ரன் குவித்து வருகிறது இலங்கை அணி. பரணவிதனா, சங்ககரா சதம் அடித்து அசத்த, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, 312 ரன்கள் எடுத்துள்ளது.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நேற்று துவங்கியது.

யுவராஜ் நீக்கம்: 


இந்திய அணியில் காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங்கும், முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட காம்பிரும் நீக்கப்பட்டனர். இவர்களுக்குப் பதில், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். "டாஸ்' ஜெயித்த இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது.

தில்ஷன் அதிரடி: 


முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு தில்ஷன் அதிரடி துவக்கம் தந்தார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 4 வது ஓவரில், தொடர்ச்சியாக 4 பவுண்டரி அடித்து அசத்தினார் தில்ஷன். இவருடன் இணைந்த பரணவிதனா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வழக்கம் போல இந்திய அணியின் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது. 


டெஸ்ட் அரங்கில் 15 வது அரை சதம் கடந்த தில்ஷன், ஓஜா சுழலில் வெளியேறினார். இவர் 10 பவுண்டரிகளுடன் 42 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார்.

சூப்பர் ஜோடி: 

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த பரணவிதனா, சங்ககரா ஜோடி இந்திய பந்து வீச்சை, நாலாபுறமும் சிதறடித்தது. அடிக்கடி பவுலர்களை மாற்றியும், இந்திய அணியால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. டெஸ்ட் அரங்கில் இரண்டாவது சதம் அடித்து அசத்திய பரணவிதனா, இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். இவர் 10 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 100 ரன்கள் சேர்த்தார். 


மறுமுனையில் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 23 வது சதம் கடந்தார். சங்ககரா, பரணவிதனா ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. அடுத்து ஜெயவர்தனா களமிறங்கினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 312 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (130), ஜெயவர்தனா (13) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த், ஓஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


முதல் நாள் முடிவில் 312 ரன்கள் எடுத்துள்ள இலங்கை அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 300 ரன்களை எட்ட அதிக வாய்ப்பு உள்ளது. இஷாந்த், மிதுன், ஹர்பஜன் உள்ளிட்ட பவுலர்கள் தொடர்ந்து விக்கெட் கைப்பற்ற தடுமாறி வருவதால், இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி சாதிப்பது கடினம் தான்.

மீண்டும் சதம்


கொழும்பு டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் சதம் கடந்து அசத்திய இலங்கை வீரர் பரணவிதனா, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 2 வது சதம் கடந்துள்ளார். இதற்கு முன் காலேவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் இவர் சதம் கடந்தார். இதே போல இலங்கை கேப்டன் சங்ககராவும், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் சதம் கடந்து அசத்தியுள்ளார்.

அனுபவம் இல்லை


இந்திய அணியின் பந்து வீச்சு மீண்டும் படுசொதப்பலாக அமைந்தது. ஜாகிர் கான் இல்லாத நிலையில், போதிய அனுபவம் இல்லாத இஷாந்த் சர்மா, மிதுன் ஆகியோர் விக்கெட் கைப்பற்ற தடுமாறி வருகின்றனர். இதனைப்பயன்படுத்திக் கொண்ட இலங்கை பேட்ஸ்மேன்கள், நெருக்கடி இன்றி ரன் குவித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, அனுபவ வீரரான ஹர்பஜன், படுமட்டமாக பந்து வீசி வருகிறார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment