மன்னார்குடி, ஜூலை 26: அச்சத்தில், குறிக்கோள் இல்லாத போராட்டங்களை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்றார் திமுக பொருளாளரும், துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா மன்னார்குடியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப் பேரவை அதிமுக முன்னாள் உறுப்பினர்கள் மன்னார்குடி சா.ஞானசுந்தரம், வேதாரண்யம் எம்.எஸ்.மாணிக்கம், மயிலாடுதுறை எம்.தங்கமணி, சீர்காழி து.மூர்த்தி, பா.ஜ.க. மாநில வர்த்தக அணிச் செயலர் சி.ஞானசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுகவில் இணைந்தவர்களிடமிருந்து முந்தைய கட்சி உறுப்பினர் அட்டைகளை பெற்றுக் கொண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இணைப்பு விழா மாநாடு போல் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்க் கட்சியாக அதிமுக இருந்தாலும், அந்த கட்சியின் வளர்ச்சிக்கு வலு சேர்க்க உண்மையாக உழைத்தவர் அழகு.திருநாவுக்கரசு என்பதை நாங்கள் அறிவோம்.
மக்கள் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்காமல் அதிமுக இருப்பதை உணர்ந்த அக் கட்சியினர் இன்று ஆயிரக்கணக்கில் திமுகவில் இணைந்துள்ளனர்.
தேர்தல் நெருங்குவதாலும், கட்சியிலிருந்து பல்வேறு தலைவர்களும், தொண்டர்களும் கூண்டோடு விலகுவதையும் கண்டு பயந்து போன ஜெயலலிதா, மிச்சமுள்ள தொண்டர்களையும் காப்பாற்றவே, கொள்கை குறிக்கோள் இல்லாத போராட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார் என்றார் ஸ்டாலின்.
கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழக அமைச்சர்கள் கோ.சி.மணி, உ.மதிவாணன், மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment