சென்னை, ஜூலை 26: இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலை, இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை குறித்து அறிய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி இலங்கைக்குச் செல்ல உள்ளார்.
இந்தத் தகவலை முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களின் இப்போதைய நிலை, போர் முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வுப் பணிகள், இந்தியா அளிக்கும் நிதி உதவி முறையாகச் செலவிடப்படுகிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள கண்காணிப்புக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார்.
÷நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திலும் திமுக இதே கோரிக்கையை வலியுறுத்தியது.அந்தக் கூட்டத்தில் இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு கண்காணிப்புக் குழு அனுப்பப்படும்' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவது குறித்து தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு, பிரச்னையைத் தீர்ப்பதற்காக இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிந்து கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுகிறார்.
அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று கடிதத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment