Pages

Saturday, September 29, 2012

யூசுப் பதான் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இயற்கை மழையில், சிக்சர் மழை பொழிந்த யூசுப் பதான், அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணியின் பவுலர்கள் படுமோசமாக சொதப்ப, மீண்டும் பரிதாப தோல்வியடைந்தது.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. நான்காவது போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதிரடி துவக்கம்:

நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் இருவரும் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். ஆஷிஸ் நெஹ்ராவில் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த கப்டில் (30), அடுத்த பந்தில் யுவராஜின் "சூப்பர்' கேட்ச்சில் வெளியேறினார். ஹவ் (4) ஏமாற்றினார்.

மெக்கலம் எழுச்சி:

கடந்த போட்டியில் ஏமாற்றிய மெக்கலம், இம்முறை அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இவர், ஆஷிஸ் நெஹ்ரா, அஷ்வின் பந்துகளை அடித்து நொறுக்க, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர், 42 ரன்கள் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில், அஷ்வின் சுழலில் வீழ்ந்தார்.

பிராங்க்ளின் அபாரம்:சற்று தாக்குப் பிடித்த ஸ்டைரிஸ் (46), இவருக்கு "கம்பெனி' கொடுத்த ரோஸ் டெய்லர் (44) இருவரும் அரைசத வாய்ப்பை இழந்தனர். பின் வந்த பிராங்க்ளின், அதிரடியில் மிரட்டினார். யூசுப் பதான், அஷ்வின் பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி விளாசிய இவர், சர்வதேச அரங்கில் தனது இரண்டாவது அரைசதம் கடந்தார். கைல் மில்ஸ் (1), நிலைக்கவில்லை.

கடின இலக்கு:

ஆஷிஸ் நெஹ்ராவின் கடைசி ஓவரில் பிராங்க்ளின், அடுத்தடுத்து 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது. பிராங்க்ளின் 98 (69 பந்து, 3 சிக்சர், 12 பவுண்டரி), நாதன் மெக்கலம் 13 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

துவக்கம் சரிவு:

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் காம்பிருடன் இணைந்து இம்முறை பார்த்திவ் படேல் துவக்கம் தந்தார். முதலில் மெதுவாக துவக்கிய பார்த்திவ் படேல், மில்ஸ் மற்றும் சவுத்தி ஓவரில் தலா இரண்டு பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் மெக்கே ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய காம்பிர் (27), அவரது வேகத்திலேயே வீழ்ந்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் விராத் கோஹ்லியும், "டக்' அவுட்டானார்.

பார்த்திவ் "50':

அடுத்து பார்த்திவ் படேலுடன், யுவராஜ் சிங் இணைந்தார். தொடர்ந்து அசத்திய பார்த்திவ் படேல், சர்வதேச அரங்கில் முதல் அரைசதம் கடந்தார். ஸ்டைரிஸ் பந்தில் சிக்சர் அடித்த யுவராஜ் (20) நீடிக்கவில்லை. நம்பிக்கை தந்த பார்த்திவ் படேலும் (53) பெவிலியன் திரும்பினார்.

மழை தடை:

பின் ரோகித் சர்மா, யூசுப் பதான் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர்கள் விளாச, லேசான நம்பிக்கை ஏற்பட்டது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா (44) அவுட்டானார். இந்திய அணி 36 ஓவரில் 203 ரன்கள் எடுத்திருந்த போது, மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

யூசுப் சதம்:

பின் மீண்டும் போட்டி துவங்கியதும் யூசுப் பதான் அதிரடியில் அசத்தினார். வெட்டோரி உட்பட யாரையும் இவர் விட்டு வைக்கவில்லை. மில்ஸ் ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 21 ரன்கள் விளாசிய இவர், மெக்கே பந்தில் இமாலய சிக்சர் அடித்து, சர்வதேச அரங்கில் முதல் சதம் (79 பந்து) கடந்தார்.

தொடர்ந்து மிரட்டிய இவருக்கு, சவுரப் திவாரி நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். நாதன் மெக்கலம் பந்து வீச்சில் திவாரி ஒரு சூப்பர் சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து, அசத்தல் வெற்றி பெற்றது. 96 பந்தில் 7 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 123 ரன்கள் எடுத்த யூசுப் பதான், சவுரப் திவாரி (37) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.

Real Football (2013) Original Mobile Game (For All Mobiles)