Pages

Tuesday, April 6, 2010

87 வயது ரசிகை சரஸ்வதி பாட்டியை சந்தித்த சச்சின்: சென்னையில் உருக்கம்!

87 வயது ரசிகை சரஸ்வதி பாட்டியை சந்தித்த சச்சின்: சென்னையில் உருக்கம்!



சென்னை: சென்னைக்கு வந்துள்ள சச்சின் டெண்டுல்கர், தனது 87 வயது ரசிக பாட்டியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்.

சென்னையைச் சேர்ந்தவர் சரஸ்வதி வைத்தியநாதன். 87 வயதிலும் இந்த பாட்டிக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை ஆசை.

அதிலும் சச்சின் பேட்டிங் என்றால், சோர்ந்து படுத்திருந்தாலும் துள்ளி எழுந்து வந்து டிவி முன்பு அமர்ந்துகொள்வார்.

பார்த்து ரசித்து பொழுது போக்குவது மட்டுமல்லாமல், சச்சினுடைய கிரிக்கெட் சமாச்சாரங்கள் அத்தனையும் இந்த 'ரசிக பாட்டி'க்கு அத்துபடி.

சச்சின் முதல் விளையாட்டை எங்கு ஆடினார், குறைந்த ஸ்கோர், அதிக ஸ்கோர் என எல்லா புள்ளி விவரங்களையும் மனப்பாடமாக பதிந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்காக சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த சச்சின், இவரைப் பற்றி பத்திரிகையில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு வரவழைக்கப்பட்டார் 'சரஸ்வதி பாட்டி'. சச்சினை டிவியில் பார்த்து பரவசமடைந்து வந்த பாட்டிக்கு, ரத்தமும், சதையுமாக நேரில் சச்சினை பார்த்ததும் முகமெல்லாம் மலர்ந்து போய்விட்டதாம்.

'உங்களை நேரில் பார்க்க நான் கொடுத்து வச்சிருக்கணும்' என சச்சினிடம் பாட்டி சொல்ல, 'அய்யயோ நான் தான் இப்படி ஒரு ரசிகரை பெற்றதுக்கு கொடுத்து வைச்சிருக்கணும்' என புளகாங்கிதமடைந்தாராம் சச்சின்.

ரசிக பாட்டியை பார்த்த உடனடியாக முதலில் மிக பணிவுடன் காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார் சச்சின்.

பின்னர் சரஸ்வதி பாட்டியின் பிரத்தியேக ஆட்டோகிராஃப் மட்டையில் தனது கையெழுத்தை போட்டுக்கொடுத்தார்.

கண்டிப்பாக 100 சர்வதேச சதங்களை சச்சின் அடிக்க வேண்டும் எனக் கூறிய சரஸ்வதி பாட்டி, சச்சினுக்கு சின்னதாக ஒரு ஒரு பிள்ளையார் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.

சச்சினை தனது 4ம் தலைமுறை பேரனாக வாஞ்சையோடு பார்த்துக்கொண்டிருந்த சரஸ்வதி பாட்டி, மிகவும் இயல்பாக, 'அஞ்சலி எப்படியிருக்கா...? அர்ஜூன்... சாரா நல்லாருக்காங்களா..' என சச்சினிடம் விசாரித்தார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment