Pages

Tuesday, May 25, 2010

மாநிலங்களவைத் தேர்தல்: 2 இடங்களில் அ.தி.மு.க.​ போட்டி



சென்னை,​​ மே 24:​ மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட அ.தி.மு.க.​ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.​ ​

​ மாநிலங்களவையில் பதவிக் காலம் முடியும் உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் ஜூன் 17-ம் தேதி நடைபெறுகிறது.​ தமிழ்நாட்டில் இருந்து 6 உறுப்பினர்களைத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.​ ​

​ இப்போது சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் தி.மு.க.​ கூட்டணி 4 இடங்களையும்,​​ அ.தி.மு.க.​ கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.​ ​

​ அ.தி.மு.க.​ அணியில் ஒரு இடத்தை அ.தி.மு.க.​ தன் சொந்தப் பலத்தின் மூலம் கைப்பற்ற முடியும்.​ இன்னொரு இடத்தை மார்க்சிஸ்ட் கட்சி,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய தோழமைக் கட்சிகள் ஆதரவளித்தால்,​​ அ.தி.மு.க.​ வெல்ல முடியும்.​ ​

​ இதற்கிடையே அ.தி.மு.க.​ அணி வெற்றி பெற வாய்ப்புள்ள இரண்டாவது இடத்தில் போட்டியிட ம.தி.மு.க.​ பொதுச் செயலாளர் வைகோ,​​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோர் முயற்சிகள் செய்வதாக செய்திகள் வந்தன.​ ​ ​

​ இந்நிலையில்,​​ 2 இடங்களிலும் அ.தி.மு.க.வே போட்டியிட முடிவு செய்துள்ளதாக இப்போது செய்திகள் வெளிவந்துள்ளன.​ இப்போது பதவிக் காலம் முடியும் 6 உறுப்பினர்களில் 4 பேர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.​ 4 இடங்களை இழக்கும் அ.தி.மு.க.வால்,​​ தோழமைக் கட்சிகள் ஆதரவளித்தால் கூட 2 இடங்களை மட்டுமே மீண்டும் பெற முடியும்.​ அதிலும் ஒரு இடத்தை தோழமைக் கட்சிகளுக்காக விட்டுக் கொடுப்பது கட்சியின் நலனுக்கு நல்லதல்ல என்று அ.தி.மு.க.​ கருதுவதாகக் கூறப்படுகிறது.​ ​

​ இந்த சூழலில்,​​ மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கக் கோரி ​ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,​​ இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க.​ தலைமை கடிதம் அனுப்பியுள்ளது.​ இதனை சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தா.​ பாண்டியன் உறுதிப்படுத்தியுள்ளார்.​ ​

​ அ.தி.மு.க.​ ஆதரவு கேட்டு கடிதம் எழுதிவிட்டதால்,​​ இனி தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்,​​ ம.தி.மு.க.​ ஆகிய கட்சிகள் வலியுறுத்தாது என்று கூறப்படுகிறது.​ ​

​ எனவே,​​ நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.​ 2 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.​ இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் 27-ம் தேதி சென்னையில் நடைபெறும் அ.தி.மு.க.​ செயற்குழுக் கூட்டத்துக்குப் பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: தினமணி
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment