Pages

Monday, May 17, 2010

முதல் கோப்பை வென்றது இங்கிலாந்து!


பார்படாஸ்: "டுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி ஜோராக கைப்பற்றியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. கீஸ்வெட்டரின் அதிரடி அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இதன் மூலம் ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை "டுவென்டி-20 உலக கோப்பை துரதிருஷ்டம் தொடர்ந்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால், வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.

வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடந்தது. நேற்று பார்படாசில் நடந்த பைனலில் "ஆஷஸ் எதிரிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட் துணிச்சலாக பீல்டிங் தேர்வு செய்தார்.

சைடுபாட்டம் மிரட்டல்:

ஆஸ்திரேலிய அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. சைடுபாட்டம் வீசிய முதல் ஓவரில் வாட்சன் அடித்த பந்து, "கீப்பர் கீஸ்வெட்டர் "கிளவுசில் பட்டு நழுவியது. அதனை சுவான் சாமர்த்தியமாக பிடிக்க, 2 ரன்களுக்கு வெளியேறினார். மைக்கேல் லம்ப்பின் நேரடி "த்ரோவில் வார்னர்(2) நடையை கட்டினார். பின் சைடுபாட்டம் வேகத்தில் பிராட் ஹாடின் (1), கீஸ்வெட்டரின் சர்ச்சைக்குரிய "கேட்ச்சில் அவுட்டானார். பந்து, ஹாடின் தொடையில் பட்டு வந்தது "ரீப்ளேவில் தெளிவாக தெரிந்தது. இப்படி "டாப்-ஆர்டர் விரைவில் சரிய, 2.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 8 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

கிளார்க் ஏமாற்றம்:
பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட இங்கிலாந்து வேகங்கள் மிக துல்லியமாக பந்துவீச, "பவர் பிளே ஓவரில் ரன் வறட்சி ஏற்பட்டது. சுவான் சுழலில் கோலிங்வுட்டின் சூப்பர் "கேட்ச்சில் கேப்டன் மைக்கேல் கிளார்க்(27) வெளியேற, ஆஸ்திரேலிய அணி 9.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து திணறியது.

டேவிட் ஹசி ஆறுதல்:

இதற்கு பின் கேமரான் ஒயிட், டேவிட் ஹசி இணைந்து போராடினர். யார்டி வீசிய 13வது ஓவரில் டேவிட் ஹசி, ஒரு சிக்சர் அடித்தார். பின் ஒயிட் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன்கள் கிடைத்தது. ஒயிட் 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சகோதரர் மைக்கேல் ஹசி "கம்பெனி கொடுக்க, டேவிட் ஹசி அரைசதம் எட்டினார். இது சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இவரது 3வது அரைசதம். இவர் 59 ரன்களுக்கு(2 சிக்சர், 2 பவுண்டரி) ரன் அவுட்டானார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் வாணவேடிக்கை காட்டிய மைக்கேல் ஹசி(17*), இம்முறை அதிரடியாக ரன் சேர்க்க இயலவில்லை. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்தது.

கீஸ்வெட்டர் கலக்கல்:

எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு லம்ப்(2) ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் கீஸ்வெட்டர், பீட்டர்சன் இணைந்து கலக்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், மிக எளிதாக ரன் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கீஸ்வெட்டர், வாட்சன், நானஸ் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். இவர் சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் தனது முதல் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் நானஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பீட்டர்சன்(47) அரைசதத்தை நழுவ விட்டார். சிறிது நேரத்தில் ஜான்சன் வேகத்தில் கீஸ்வெட்டர் 63 ரன்களுக்கு(7 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டாக, லேசாக பதட்டம் ஏற்பட்டது.

பின் மார்கன், கேப்டன் கோலிங்வுட் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். வாட்சன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கோலிங்வுட், அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "டுவென்டி-20 உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. ஆஸ்திரேலியா மீண்டும் ஏமாற்றம் அளித்தது.

ஆட்ட நாயகனாக கீஸ்வெட்டர் மற்றும் தொடர் நாயகனாக பீட்டர்சன் தேர்வு செய்யப்பட்டனர்.


புதிய வரலாறு

நேற்று சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் தொடர்களில், முதன்முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. முன்னதாக ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் மூன்று முறை (1979, 87, 92), சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில் ஒரு முறை (2004) பைனல் வரை சென்று, கோப்பை வெல்ல தவறியது. தவிர இது, "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில், இங்கிலாந்து அணியின் முதல் சாம்பியன் பட்டம்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment