காலே: காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 520 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது இலங்கை அணி. கடின இலக்கை விரட்டிய இந்திய அணி, காம்பிர், டிராவிட், சச்சின் விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்க திணறி வருகிறது. அதிரடி காட்டிய சேவக் 85 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி காலேவில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. பரணவிதனா (110), ஜெயவர்தனா (8) அவுட்டாகாமல் இருந்தனர். மழையின் காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்தானது.
வேகம் அசத்தல்:
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நேற்று முன் தினம் பெய்த மழையின் காரணமாக ஆட்டம் அரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. இஷாந்த், மிதுன் ஜோடி பந்து வீச்சில் மிரட்டியது. இஷாந்த் வேகத்தில் பரணவிதனா அவுட்டானார்.
இவர் 111 ரன்கள் (12 பவுண்டரி) சேர்த்தார். அடுத்து களமிறங்கிய சமரவீரா, டக்-அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய இஷாந்த் சர்மா ஜெயவர்தனா (48), மாத்யூஸ் (41) ஆகியோரை வெளியேற்றி நம்பிக்கை அளித்தார். மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய பிரசன்ன ஜெயவர்தனா (27), மிதுனிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 393 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.
சூப்பர் ஜோடி:
விரைவில் இலங்கை அணியை சுருட்டி விடலாம் என்று நினைத்த இந்திய அணிக்கு 8 வது விக்கெட்டுக்கு இணைந்த மலிங்கா, ஹெராத் ஜோடி அதிர்ச்சி அளித்தது. இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, விரைவாக ரன் குவித்தது. டெஸ்ட் அரங்கில் மலிங்கா, ஹெராத் இருவரும் முதல் அரை சதம் கடந்தனர்.
இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மிதுன் வேகத்தில், மலிங்கா பெவிலியன் திரும்பினார். இவர் 64 (2 சிக்சர்,9 பவுண்டரி) ரன்கள் எடுத்தார். 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்திருந்த போது முதல் இன்னிங்சை, "டிக்ளேர்' செய்தது. ஹெராத் (80), முரளிதரன் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பந்து வீச்சில் மிரட்டிய இந்தியாவின் மிதுன் 4, இஷாந்த் 3 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் "அவுட்':
வலுவான இலக்கை விரட்டிய இந்திய அணி, துவக்க வீரர் காம்பிர் விக்கெட்டை விரைவில் இழந்தது. மலிங்கா வேகத்தில் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டானார் காம்பிர். அடுத்து வந்த டிராவிட், சேவக்குடன் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த நிலையில், தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் செய்யப்பட்டார் டிராவிட் (18).
முரளி அசத்தல்:
ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், துவக்க வீரர் சேவக் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். டெஸ்ட் அரங்கில் 22 வது அரை சதம் கடந்தார் சேவக். இவருடன் இணைந்த சச்சின், முரளிதரன் சுழலில் சிக்கினார்.
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய முரளி, சச்சினை (8) வெளியேற்றி அசத்தினார். இந்நிலையில் 3 ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 29.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, 140 ரன்கள் எடுத்திருந்தது. சேவக் (85), லட்சுமண் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை ஆதிக்கம்:
காலே டெஸ்டில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி தற்போது 380 ரன்கள் பின்தங்கியுள்ளது கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய 4 வது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழக்காமல் பேட் செய்து, ரன் குவித்தால் மட்டுமே நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.
முரளிக்கு மரியாதை
காலேவில் நடக்கும் போட்டியுடன், டெஸ்ட் அரங்கில் ஓய்வு பெற உள்ளார் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். நேற்றைய போட்டியில், இவர் பேட் செய்ய வந்த போது, அவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்திய வீரர்கள் வரிசையாக நின்று பாராட்டு தெரிவித்தனர். மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.








No comments:
Post a Comment