காலே, ஜூலை 18: இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.
காலே சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் ஆட்டம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக தெடங்கியது. சனிக்கிழமை பிற்பகல் அங்கு கனமழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டது. அதே போல மாலையிலும் ஆட்டம் முடியும் முன்பாக மேகமூட்டத்தால் ஏற்பட்ட வெளிச்சக்குறைவு மற்றும் மழையால் முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை துவங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக பரணவிதனவும் தில்ஷனும் களமிறங்கினர். 6 பவுண்டரிகளை விளாசி 24 பந்துகளில் 25 ரன்களை குவித்த தில்ஷன் 11-வது ஓவரில் இந்திய வீரர் மிதுனின் பந்து வீச்சில் அணித் தலைவர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். எனினும் பரணவிதன நிலைத்து நின்று ஆடினார். அவர் 229 பந்துகளுக்கு 110 ரன்கள் எடுத்தார். 12 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.
தில்ஷன் வெளியேறியவுடன் பரணவிதனவுடன் ஜோடி சேர்ந்தார் இலங்கை அணித்தலைவர் சங்ககரா. தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அபாரமாக விளையாடி சதம் அடித்த சங்ககரா, 12 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். 103 ரன் எடுத்த நிலையில் 62-வது ஓவரில் சேவாக்கின் பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன் பின்னர் பரணவிதனவும் ஜெயவர்த்தனேவும் ஜோடி சேர்ந்தனர். ஜெயவர்த்தனே 14 பந்துகளில் 8 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெயவர்த்தனேவும் பரணவிதனாவும் களத்தில் ஆடிக் கொணிடிருந்த போது மாலை 4.30 மணி அளவில் மேகமூட்டம் அதிகமாகி இருள் சூழத் தொடங்கியது. இதை அடுத்து லேசாக மழை பெய்யவும் தொடங்கியது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு திங்கள்கிழமை தொடரும் என அறிவிக்கப்பட்டது. பரணவிதன 110ல ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 14 ஓவர்கள் பந்து வீசி 79 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இஷாந்த ஷர்மா அதிக ரன்களை விட்டுக் கொடுத்த போதும் அவருக்கு அடுத்து பந்து வீசிய புதுமுக வீரர் மிதுன் சிறப்பாக பந்து வீசி 13 ஓவர்களில் 41 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேலும் அவரது பந்து வீச்சின் முலம் தில்ஷனின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கையின் முத்தையா முரளீதரன் அறிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை இவர் பெற முடியும்.
இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு முன் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பின்னர் டெஸ்ட் தொடரை இலங்கையில் இந்தியா வெல்லவில்லை. எனவே இந்திய அணி உத்வேகத்துடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் ஆட்டம் முடிய இன்னும் 4 நாள்கள் உள்ளன. இந்நிலையில் போட்டி நடைபெறும் இலங்கையின் காலே உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தடையின்றி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கை: ஸ்கோர் விவரம்- முதல் இன்னிங்ஸில் 68 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள்.






No comments:
Post a Comment