Pages

Saturday, July 3, 2010

அரையிறுதியில் நெதர்லாந்து, உருகுவே : காலிறுதிப் போட்டியில் பிரேசில், கானா அணிகள் அதிர்ச்சி தோல்வி

அரையிறுதியில் நெதர்லாந்து: காலிறுதிப் போட்டியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

போர்ட் எலிசபெத், ஜூலை 2: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து.


வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது.

பரபரப்பின் உச்சத்தை அடைந்துள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் காலிறுதி ஆட்டம் போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது. இதில் 5 முறை சாம்பியனும், இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியான பிரேசிலும், நெதர்லாந்தும் மோதின.


ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். 10 வது நிமிஷத்தில் பிரேசில் வீரர் ராபின்ஹு கோல் அடித்து அசத்தினார். இதனால் 1-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றது.


தொடர்ந்து நெதர்லாந்து வீரர்கள் கோல் அடிக்க கடுமையாகப் போராடினர். எனினும் பிரேசில் வீரர்களின் கையே தொடர்ந்து ஓங்கியிருந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.


இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் புதிய உத்வேகத்துடன் களம் இறங்கினர். வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் அனைத்து வீரர்களிடமும் காணப்பட்டது. நெதர்லாந்து வீரர்களின் கோலடிக்கும் முயற்சிக்கு 53-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் மெலோ கோல் அடித்து கோல் கணக்கை 1-1 என சமன் செய்தார்.

68-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் வெஸ்லி ஸ்நைடர் மேலும் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலையைப் பெற்றுத் தந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேசில் வீரர்கள் கோலடிக்க கடுமையாக முயன்றனர். ஆனாலும் நெதர்லாந்து வீரர்களின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தால் பிரேசில் வீரர்கள் கோல் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பையும் பிரேசில் வீரர்கள் தவற விட்டனர். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.


பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பிரேசில் காலிறுதியில் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள பிரேசில் அணியின் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அரையிறுதியில் உருகுவே :  கானா  தோல்வி

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு, உருகுவே அணி முன்னேறியது. இன்று நடந்த காலிறுதியில் கானா அணியை, "பெனால்டி ஷூட் அவுட்டில்' வீழ்த்தியது. கடைசி வரை போராடிய கானா அணிக்கு, "பெனால்டி கிக்' வாய்ப்பை வீணடித்த, ஜியான் வில்லனாக மாற, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதின.

போட்டி துவங்கியது முதல் இரு அணியினரும் முன்னிலை பெற போராடினர். உருகுவே அணிக்கு அடுத்தடுத்து, "கார்னர் கிக்' வாய்ப்புகள் கிடைத்தது. இருப்பினும் இதை வீணடித்தனர்.


போட்டியின் 29 மற்றும் 31 வது நிமிடத்தில் கானா அணிக்கு "சூப்பர்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை வோர்ஷா, ஜியான் ஆகியோர் கோல் போஸ்ட்டுக்கு வெளியே அடித்து ஏமாற்றினர். ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கானாவின் முன்ட்டாரி, கோல் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இப்படி தொடர்ந்து நடத்திய தாக்குதலுக்கு, கடைசியில் பலன் கிடைத்தது. முதல் பாதியின் "ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (47வது நிமிடம்) கானாவின் முன்ட்டாரி, 27 மீட்டர் தொலைவில் அசத்தல் கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதியில் கானா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

உருகுவே பதிலடி:


இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட, உருகுவே அணிக்கு 55வது நிமிடத்தில் "பிரி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை அணியின் நட்சத்திர வீரர் போர்லன், கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க, இது அசத்தலான கோலாக மாறியது. இதையடுத்து ஸ்கோர் 1-1 என சமனானது. 63வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு வாய்ப்பை, உருகுவேயின் சுவாரெஜ் வீணாக்கினார். இறுதியில் இரு அணியினரும், மேலும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், 1-1 என போட்டி சமனானது.

கூடுதல் நேரம்:


இதையடுத்து போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. முதல் பாதியில் இருஅணியினரும் கோல் அடிக்கவில்லை. இருப்பினும் கானா அணியினர் தொடர்ந்து, உருகுவே கோல் பகுதிக்குள் அடுத்தடுத்து தாக்குல் நடத்தினர்.

போட்டியின் "ஸ்டாப்பேஜ்' (122 வது நிமிடம்), கானா அணியினர் அடித்த பந்தை, கோல் லைனில் வைத்து கையால் தடுத்து, உருகுவே அணிக்கு வில்லனாக மாறினார் முன்னணி வீரர் சுவாரெஜ். இதையடுத்து உடனடியாக நடுவரால் "ரெட்கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் செய்த தவறு காரணமாக, கானாவுக்கு "பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது.

இதில் கோல் அடித்து அணியை, அரையிறுதிக்கு கொண்டு செல்லலாம் என்ற கனவுடன், வந்தார் ஜியான். ஆனால் பந்தை கோல் போஸ்டின் மேல் அடித்து வில்லனாக மாறினார். கூடுதல் நேரத்திலும் ஸ்கோர் 1-1 என சமமாக இருந்தது.


இதையடுத்து "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்டது.


* முதல் வாய்ப்பில் போர்லன்(உருகுவே), ஜியான்(கானா) கோல் அடித்தனர்.

* இரண்டாவது வாய்ப்பில் விக்டோரினோ(உருகுவே), அப்பியா(கானா) என
இருவரும் கோல் அடிக்க, ஸ்கோர், 2-2 என சமநிலை எட்டியது.

* மூன்றாவது வாய்ப்பில் கானாவின் மென்ஷா, பந்தை கோல் கீப்பரிடம் அடித்து வாய்ப்பை வீணாக்கினார். ஆனால் ஸ்காட்டி (உருகுவே) தன் பங்கிற்கு கோல் அடிக்க, உருகுவே 3-2 என முன்னிலை பெற்றது.

* நான்காவது வாய்ப்பை உருகுவேயின் பேராரா, கோல் போஸ்ட்டுக்கு மேலாக அடித்து ஏமாற்றினார். மீண்டும் ஸ்கோரை சமன் செய்ய கானாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடியாவும் (கானா) கோல் கீப்பரிடம் அடித்து கோட்டைவிட, கானாவின் தோல்வி உறுதியானது. (3-2)

* ஐந்தாவது வாய்ப்பில் தந்திரமாக செயல்பட்ட அப்ரியூ (உருகுவே), பந்தை மெதுவாக கோல் போஸ்ட்டை நோக்கி அடித்து, கோலாக மாற்றினார். (4-2) இதையடுத்து "பெனால்டி ஷூட் அவுட்' முறையில், 5-3 என வென்ற உருகுவே அணி, ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
Blog Widget by LinkWithin

1 comment:

Ramesh said...

நல்லா இருக்கு தவறமால் வாசிக்கிறேன்
நன்றி
இங்க தலைப்பு அரை இறுதி அல்ல கால் இறுதி என்று நினைக்கிறன்

Post a Comment