கொழும்பு: இந்தியா, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதிய மூன்று நாள் பயிற்சி போட்டி "டிரா'வில் முடிந்தது. இந்திய பவுலர்கள் எழுச்சி கண்டனர். இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி தரப்பில் திரிமன்னே சதம் அடித்து அசத்தினார்.
இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 18ம் தேதி காலேயில் துவங்குகிறது. இதற்கு முன் இந்திய அணி, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடியது.
கொழும்புவில் நடந்த இப்பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 9 விக்கெட்டுக்கு 514 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 291 ரன்களுக்கு சுருண்டு "பாலோ-ஆன்' பெற்றது. இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.
திரிமன்னே அபாரம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. "பாலோ-ஆன்' பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது இன்னிங்சை, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி துவக்கியது. இந்த அணிக்கு உபுல் தரங்கா (21) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த திரிமன்னே, சாண்டிமல் ஜோடி பொறுப்பாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த போது சாண்டிமல் (69) அவுட்டானார்.
அடுத்து வந்த ஜெயவர்தனே (12), கவுசல் சில்வா (4), சமரவீரா (25) ஏமாற்றம் அளித்தனர். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய திரிமன்னே சதமடித்து அசத்தினார். இவர் 102 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டு அணி கேப்டன்களும் 3ம் நாள் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர். இதனால் இப்போட்டி "டிரா' என அறிவிக்கப்பட்டது.
இலங்கை அணியின் கண்டம்பி (9), செனனாயகே (6) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பிரக்யான் ஓஜா 3, இஷாந்த், அமித் மிஸ்ரா, சேவக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய தரப்பில், முதல் இன்னிங்ஸில் தனது திறமையான பந்து வீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பயிற்சி ஆட்டத்தில் மிகவும் மோசமாக விளையாடி போட்டியை டிரா செய்துள்ளது இந்தியா. இதே நிலை தொடர்ந்தால் தொடரை கைப்பற்றுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.



No comments:
Post a Comment