Pages

Sunday, July 18, 2010

வெற்றியுடன் துவக்குமா இந்தியா : இலங்கையிடன் இன்று முதல் டெஸ்ட் போட்டி

காலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று காலேவில் துவங்குகிறது. 17 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத இந்திய அணி, இந்த முறை சாதிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேவில் இன்று துவங்குகிறது.

17 ஆண்டுகளாக...:

இலங்கை மண்ணில் இந்திய அணி கடந்த 17 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை கைப்பற்ற வில்லை. அதற்கு முன் கடந்த 1993 ம் ஆண்டு அசாருதின் தலைமையிலான இந்திய அணி 1-0 கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. இந்த முறை தோனி தலைமையில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பேட்டிங் பலம்:

சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் வருகையால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. தவிர, சேவக், காம்பிர், தோனி, யுவராஜ், முரளி விஜய் என பேட்டிங் படை, இலங்கை அணியை மிரட்டும் வகையில் உள்ளது. ஆனால் இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், இந்திய அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியம்.

பவுலிங் பலவீனம்:


இலங்கை டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் இருவரும் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளது. இதனால் அணியின் வேகப்பந்து வீச்சு பலவீனமாகவே உள்ளது. இஷாந்த் சர்மா, முனாப் படேல், அபிமன்யு மிதுன் உள்ளிட்ட வீரர்கள் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஹர்பஜன், ஓஜா, மிஸ்ரா உள்ளிட்ட சுழற் பந்து வீச்சாளர்களை முழுவதுமாக நம்பியுள்ளது இந்திய அணி. பயிற்சி போட்டியில் இந்திய சுழற் பந்து வீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது, ஆறுதல் அளிக்கும் விஷயம்.

தோனி நம்பிக்கை:


இலங்கை மண்ணில் இந்த முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவத்துள்ளார் கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறியது: இலங்கை மண்ணில் இந்திய அணியின் செயல்பாடுகள் பாராட்டும்படியாக இல்லை. ஆனால் கடந்த காலத்தை பற்றி பேச விரும்ப வில்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம். இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதனால் அந்த அணியின் பலம், பலவீனங்களை தெரிந்து வைத்துள்ளோம். இலங்கை அணி சொந்த மண்ணில் வலுவான அணியாக இருந்தாலும், அவர்களை வீழ்த்த இந்திய அணியால் முடியும். இவ்வாறு தோனி தெரிவித்தார்.

கடைசி டெஸ்ட்:

இந்தியாவுக்கு எதிரான இன்றைய டெஸ்ட், இலங்கை அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது. இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான், முத்தையா முரளிதரன், பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டி இது தான். இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் 792 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார் முரளிதரன். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தும் பட்சத்தில், 800 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டலாம்.

வலுவான அணி:

டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி, வலுவாக உள்ளது. தரங்கா, தில்ஷன், சங்ககரா, ஜெயவர்தனா, கண்டம்பி, திரிமன்னே, சமரவீரா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அசத்த உள்ளனர். பவுலிங்கில் மலிங்கா, பெர்னாண்டோ, வெலகேதரா, முரளிதரன், ரன்திவ், ஹெராத் உள்ளிட்டோர் சாதிக்க காத்திருக்கின்றனர். சொந்த மண்ணில் மீண்டும் ஒரு முறை முத்திரை பதிக்க காத்திருக்கிறது இலங்கை அணி.

முதலிடம் நீடிக்குமா?:

இந்திய அணி (124 புள்ளிகள்) சர்வதேச டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி (115 புள்ளிகள்) 4 வது இடத்தில் உள்ளது. இத்தொடரில் வெற்றியை எட்டும் பட்சத்தில், இந்திய அணி தனது முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கலாம். இத்தொடரை இழக்கும் பட்சத்தில், ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்க அணி (120 புள்ளிகள்), முதலிடத்தை எட்டும். இந்திய அணி 2 வது இடத்துக்கு தள்ளப்படும்.

வெற்றி அதிகம்

* இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்திய அணி 13 போட்டிகளில் வெற்றியை எட்டியுள்ளது. இலங்கை அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. 14 போட்டிகள் "டிராவில்' முடிந்துள்ளன.

* இவ்விரு அணிகளும் இதுவரை 12 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளன. இதில், அதிக பட்சமாக இந்திய அணி 6, இலங்கை அணி 3 முறை டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளன. 3 தொடர்கள் "டிராவில்' முடிந்துள்ளன.

* இன்றைய போட்டி நடக்க உள்ள காலே, சர்வதேச மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment