சென்னை: "சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வாய்தா கேட்பதை கண்டித்தும், கோர்ட் கவனத்திற்கு கொண்டு செல்லவும், தி.மு.க., இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மீது எந்தெந்த வழக்குகளில் எத்தகைய தீர்ப்புகள் கூறப்பட்டிருக்கின்றன என முதல்வர் கருணாநிதி பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார். அதற்கு பதில் சொல்ல வழியில்லாமல், தான் ஏதோ கோர்ட்டுகளால் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு பொய்யைச் சொல்லி வருகிறார். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொல்லிக் கொண்டு, கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை ஆட்சி செய்ததில், 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்கு ஜெயலலிதா சொத்துக்களைக் குவித்ததாக 97ம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடுக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வழக்கு ஒரு முடிவுக்கு வந்து, தீர்ப்பு வழங்க வாய்ப்பு ஏற்படவில்லை. தீர்ப்பு வழங்க இயலாத அளவிற்கு, ஜெயலலிதா தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வாய்தா கேட்பதும், நீதிபதிகள் அதை மறுப்பதும், அதன் மீது மேல்முறையீடு செய்கிறேன் என்று ஜெயலலிதாவின் வக்கீல்கள் வாதாடுவதும், எப்படியோ ஆண்டுகள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எந்த அளவிற்கு காலதாமதத்தை உருவாக்குகிறார் என்பதை நாடறியும்.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா கவலைப்படுவதே இல்லை. வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பலமுறை, இவ்வாறு வாய்தா கேட்கும் முறையை கண்டித்த போதிலும், அந்த கோர்ட்டையே ஜெயலலிதா மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்.
அந்த அடிப்படையில் தான் தற்போது வாய்தா கேட்ட போது, ஐந்தாண்டுகளுக்கு முன் 2005ம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டு, தரப்பட்ட வாக்குமூலங்களில் மொழி பெயர்ப்பு சரியில்லை என்பதாக ஒரு காரணத்தைக் கூறியிருக்கிறார்.
அவர்களுடைய குறிக்கோள் எல்லாம் எப்படியாவது காலத்தை நீட்டித்து, தண்டனையில் இருந்து தப்ப வேண்டுமென்பது தானே தவிர வேறல்ல. இவ்வாறு ஜெயலலிதா தொடர்ந்து வாய்தா கேட்டு, தமிழக மக்களையே அவமதித்துக் கொண்டிருக்கும் போக்கை கண்டிக்கும் வகையிலும், கோர்ட்டின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தி.மு.க., இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் முன் தேதி அறிவித்து, ஆர்ப்பாட்டம் அந்தந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment