Pages

Wednesday, July 28, 2010

"பாலோ-ஆன்' தவிர்க்குமா இந்தியா ?

கொழும்பு: கொழும்பு டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. "பாலோ-ஆன்' தவிர்க்க இன்னும் 348 ரன்கள் எடுத்தாக வேண்டும். சங்ககரா இரட்டை சதம் மற்றும் ஜெயவர்தனா சதம் அடிக்க, இலங்கை அணி 642 ரன்கள் குவித்து, வலுவான நிலையில் உள்ளது. இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பினர். பின் அதிரடியாக அரைசதம் கடந்த சேவக் நம்பிக்கை அளித்தார்.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில், வெற்றி பெற்ற இலங்கை அணி, 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் கொழும்பில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (130), ஜெயவர்தனா (13) அவுட்டாகாமல் இருந்தனர்.


சங்ககரா இரட்டை சதம்:


நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. சங்ககரா, ஜெயவர்தனா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய பந்து வீச்சு படுசொதப்பலாக அமைய, சங்ககரா விளாசல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ஹர்பஜன் சுழலில் ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்த சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 7 வது இரட்டை சதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், சேவக் சுழலில் அவுட்டானார். 29 பவுண்டரிகள் உட்பட 219 ரன்கள் குவித்தார் சங்ககரா. 3 வது விக்கெட்டுக்கு சங்ககரா, ஜெயவர்தனா ஜோடி 193 ரன்கள் எடுத்தது.

ஜெயவர்தனா சதம்: 


அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெயவர்தனா, டெஸ்ட் அரங்கில் 28 வது சதம் கடந்தார். இவருடன் இணைந்த சமரவீரா, அதிரடியாக ஆட, இலங்கை அணி மளமளவென ரன் குவித்தது. இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட ஜெயவர்தனா 174 ரன்களுக்கு (20 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டானார். 

4 விக்கெட் இழப்புக்கு 642 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்சை "டிக்ளேர்' செய்தது இலங்கை அணி. சமரவீரா (74) அவுட்டாகாமல் இருந்தார்.

சேவக் அதிரடி: 


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு, சேவக் அதிரடி துவக்கம் தந்தார். இவருடன் இணைந்த மற்றொரு துவக்க வீரர் முரளிவிஜய் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். தம்மிகா பிரசாத் வீசிய ஆட்டத்தின் 3 வது ஓவரில், 3 பவுண்டரிகளை விளாசிய சேவக், இலங்கை பந்து வீச்சை சிதறடித்தார். டெஸ்ட் அரங்கில் 22 வது அரை சதம் கடந்தார் சேவக். 

நேற்றைய 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருந்தது. சேவக் (64), முரளி விஜய் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.


தற்போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 547 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதில் 348 ரன்கள் எடுத்தால் மட்டுமே "பாலோ-ஆன்' தவிர்க்க முடியும். கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய 3 வது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும்பட்சத்தில், இலங்கை அணிக்கு பதிலடி கொடுக்கலாம்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment