கொழும்பு: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து, முழங்கால் காயம் காரணமாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் முனாப் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. பின் மூன்றாவது அணியாக நியூசிலாந்து பங்கேற்க முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 18 ம் காலேயில் துவங்குகிறது.
அதற்கு முன்னதாக கொழும்புவில் இன்று துவங்க உள்ள 3 நாள் பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் விளையாட உள்ளன. இதற்காக இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.
ஸ்ரீசாந்த் நீக்கம்:
இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு நேற்று முன் தினம் "ஸ்கேன்' செய்து பார்க்கப்பட்டது.
இதன் முடிவு நேற்று வெளிவந்தது. இதில், காயத்தின் தன்மை தீவிரமாக இருந்ததால், ஸ்ரீசாந்த் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் நாடு திரும்புகிறார்.
இவருக்குப் பதில், மாற்று வீரராக முனாப் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பவுலிங் பலவீனம்:
முன்னதாக ஜாகிர் இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது ஸ்ரீசாந்தும் விலகியுள்ளார். முன்னணி சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன், காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது. அபிமன்யு மிதுன், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உன்கட் ஆகிய இளம் வீரர்கள் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பயிற்சி போட்டி:
இந்தியா, இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. முன்னணி பவுலர்கள் இல்லாத நிலையில், இந்திய அணிக்கு பயிற்சி போட்டி நெருக்கடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: தோனி
இலங்கை டெஸ்ட் தொடரில், இளம் வீரர்கள் சாதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: காயம் காரணமாக ஜாகிர், ஸ்ரீசாந்த் இலங்கை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். முக்கியமான இத்தொடரில் முன்னணி வீரர்களை இழந்துள்ளோம். காய்ச்சல் காரணமாக ஹர்பஜன் இன்றைய பயிற்சி போட்டியில் பங்கேற்க மாட்டார்.
இருப்பினும் முதல் டெஸ்டில்,அவர் விளையாடுவார். முன்னணி பவுலர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
காலேவில் நடக்க உள்ள முதல் டெஸ்டுடன் ஓய்வு பெற உள்ள இலங்கையின் சுழற் பந்து வீச்சாளர் முரளிதரன் உலகின் சிறந்த பவுலர். இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அவருக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். இவ்வாறு தோனி கூறினார்.




No comments:
Post a Comment