ஒரு மக்களவை உறுப்பினர் தனது தொகுதி மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படுகிறார் என்பதை எப்படி கண்டறிவது?
ஓர் எளிய வழி... எம்.பி.க்கள் ஆண்டுதோறும் தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த அளவுக்கு சரியாக செலவழிக்கிறார்கள் என்பதில் இருந்து கூட அவர்களது அக்கறையைக் கணக்கிட முடியும்.
அந்த வகையில், சிறப்பாக செயல்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
மக்களவை உறுப்பினர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.2 கோடி வீதம் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது.
ஜூன் 2010 வரையிலான கணக்குப்படி, இதுவரை 545 உறுப்பினர்களில் 130 பேர் தங்களது தொகுதிக்கு ஒரு பைசா கூட இன்னும் செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துள்ளனர்.
ஓரணியில் சோனியா, அத்வானி!
தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒற்றை ரூபாய் கூட செலவு செய்யாதவர்கள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிஜேபி மூத்த தலைவர் அத்வானி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல், தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூட செலவிட முடியாத அளவுக்கு கடந்த 14 மாதமாக பிஸியாக இருக்கும் அமைச்சர்கள் பட்டியலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஊரக மேம்பாட்டு அமைச்சர் சி.பி.ஜோஷி, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன், தொலைத் தொடர்பு அமைச்சர் அ.ராசா ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
சச்சின் பைலட் போன்ற இளம் அமைச்சர்கள் கூட தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
அழகிரி டாப்...
தங்கள் தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், 1.24 கோடி ரூபாயை செலவு செய்து முதலிடத்தில் இருக்கிறார், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி.
அவருக்கு அடுத்தபடியாக, ரூ.1.19 கோடி செலவு செய்து இரண்டாம் இடத்தில் மக்களவை சபாநாயகர் மீரா குமார் உள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முறையே ரூ.1.09 கோடி, ரூ.1 கோடி மற்றும் ரூ.97 லட்சத்தை செலவு செய்துள்ளனர்.
எம்.பி.க்களின் கோரிக்கை!!!
மக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் வரக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடி கொடுக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் ரூ.10 கோடி வழங்கப்படுகிறது.
இதன்மூலம் அவர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய நலத்திட்டங்களை, யாரையும் எதிர்பார்க்காமல் செய்து முடித்து விட முடியும்.
இந்தத் தொகை போதவில்லை; உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர்கள் பலரும் ஒருசேர குரல் கொடுக்கின்றனர். ரூ.2 கோடி என்பதை ரூ.5 கோடி என்ற அளவுக்கு இல்லாமல் போனாலும் கூட ரூ.3 கோடி அளவுக்காவது உயர்த்த வேண்டும் என்பது அவர்களது விருப்பம்.
ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டு வரும் ரூ.2 கோடியில் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்ய முடியாத அளவுக்கு மொத்தமுள்ள 545 உறுப்பினர்களில் 130 பேர் கடுமையாக உழைத்து வருவது தான் சோகக்கதையாக இருக்கிறது!

No comments:
Post a Comment