Pages

Thursday, August 26, 2010

சேவக் சதம்: பைனலில் இந்தியா

தம்புலா, ஆக.25: சேவாக்கின் அதிரடியான ஆட்டம், பிரவீண் குமார், முனாப் படேல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 105 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா.


முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்திய- நியூசிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் தம்புலாவில் புதன்கிழமை நடந்தது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். தினேஷ் கார்த்திக், சேவாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.


தொடக்கமே தடுமாற்றம்: 3 பந்துகளை மட்டுமே சந்தித்த கார்த்திக், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, யுவராஜ் சிங், ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

நாயகன் சேவாக்: 

தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பதற்றமில்லாமல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சேவாக்.

அவரை ஆட்டமிழக்க நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்க வில்லை. சேவாக்குக்கு துணையாக கேப்டன் தோனியும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார்.


110 ரன்களைச் சேர்த்திருந்தபோது மெக்குலம் பந்துவீச்சில் எதிர்பாராதவிதமாக, வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சேவாக்.

அவரை அடுத்து தோனியும் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனிக்கு அடுத்து வந்த வீரர்களில் ஜடேஜா மட்டும் 17 ரன்கள் எடுத்தார். மற்ற எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒற்றை இலக்க எண்களிலேயே ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

46.3 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் செüதி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு அடுத்தபடியாக சுழற்பந்து வீச்சாளர் மெக்குலம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கியது நியூசிலாந்து. தொடக்க வீரர்களாக வாட்லிங், குப்தில் களமிறங்கினர்.

தொடர் சரிவு: 


வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது. பிரவீண் குமார் பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்திலேயே, எல்.பி.டபிள்யூ.ஆகி வெளியேறினார் குப்தில். அவரைத் தொடர்ந்து வாட்லிங் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


கேப்டன் ராஸ் டெய்லர் 8 ரன்களுக்கும், ஸ்டைரிஸ் ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.


இலியட் 11 ரன்களுக்கும், வில்லியம்ஸன் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 80 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. அந்த அணியில் மில்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி, 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.


நியூசிலாந்து அணி 30.1 ஓவரில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 105 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்திய தரப்பில் பிரவீண் குமார், முனாப் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 110 ரன்கள் எடுத்த சேவாக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


சூப்பர் ஜோடி


நேற்று சேவக்-தோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிராக 5வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது. முன்னதாக கடந்த 1981ல் பிரிஸ்பேனில் நடந்த போட்டியில், இந்தியாவின் வெங்சர்க்கார்-சந்தீப் படீல் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்திருந்தது.

"1000' பவுண்டரி

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று 16 பவுண்டரிகள் விளாசிய சேவக், ஒருநாள் அரங்கில் 1000 பவுண்டரிகளை கடந்த 7வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார். 

இதுவரை இவர் 227 போட்டியில் பங்கேற்று 1013 பவுண்டரி அடித்துள்ளார். இவ்வரிசையில் இந்தியாவின் சச்சின் (1927 பவுண்டரி), இலங்கையின் ஜெயசூர்யா (1500 பவுண்டரி), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (1164 பவுண்டரி) "டாப்-3' வரிசையில் உள்ளனர்.

* தவிர இச்சாதனை படைத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். ஏற்கனவே சச்சின், கங்குலி (1122 பவுண்டரி) ஆகியோர் 1000 பவுண்டரிகளை கடந்தனர்.

* டெஸ்ட் போட்டியில் 1007 பவுண்டரி விளாசியதன்மூலம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 1000 பவுண்டரிகளை கடந்த 4வது சர்வதேச வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இவ்வரிசையில் இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீசின் லாரா, இலங்கையின் ஜெயசூர்யா உள்ளனர். தவிர, இச்சாதனை படைத்த 2வது இந்திய வீரரானார்.

முனாப் "50'

நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கலம்மை அவுட்டாக்கிய இந்திய வீரர் முனாப் படேல், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 50வது விக்கெட்டை(44 போட்டி) பதிவு செய்தார்.

பழிதீர்த்தது

முத்தரப்பு தொடரின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 88 ரன்களுக்கு சுருட்டியது. இதற்கு நேற்று இந்திய அணி பழி தீர்த்தது. நியூசிலாந்தை 118 ரன்களுக்கு சுருட்டிக் காட்டியது.

ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா சந்திக்கிறது.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment