முதல் போட்டி : மும்பை இந்தியன்ஸ் Vs தெற்கு ஆஸ்திரேலியா
டர்பன்: சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின், இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, தெற்கு ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் மும்பை வெற்றி பெற்று, அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வாய்ப்புள்ளது. தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் "பி' பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டியில், சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, தெற்கு ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
பீல்டிங் முன்னேற்றம்:
மும்பை அணி தனது முதல் போட்டியில் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பியது. இதில் முன்னேற்றம் அடைந்தால் தான் வலிமையான தெற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தலாம். கேப்டன் சச்சினின் அசத்தலான "பார்ம்' இன்றும் தொடரும் என நம்பலாம். சிகர் தவான், சதீஷ், அம்பாதி ராயுடு போன்றவர்கள் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். டுமினி, அதிரடி போலார்டு அதிக ரன்குவித்தால் அணிக்கு நல்லது.
பவுலிங் மோசம்:
மும்பை அணியின் பவுலிங் முதல் போட்டியில் மோசமாக இருந்தது. முன்னணி வீரர் ஜாகிர் கான், மெக்லாரன் எழுச்சி காண வேண்டும். ஆனால் மலிங்கா அசத்தலான பவுலிங்கை வெளிப்படுத்துவது சச்சினுக்கு ஆறுதல் தான். சுழலில் ஹர்பஜன் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. தவிர, "பார்ட் டைம்' பவுலர்கள் போலார்டு, சதீஷ், டுமினியும் சோபிக்கவில்லை. இதைச் சரிசெய்ய "ஆல் ரவுண்டர்' பிராவோவிற்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
கேப்டன் பலம்:
தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் கிளிங்கர் பெரும் பலமாக உள்ளார். கடந்த போட்டியில் அசத்திய இவர் இன்றும் சாதிக்கலாம். இவருடன் பெர்குசனும் கைகொடுப்பார் எனத் தெரிகிறது. தவிர, முன்னணி வீரர்கள் டேனியல் ஹாரிஸ், மானவ், கிறிஸ்டியன், டாம் கூப்பர் போன்றவர்களும் பேட்டிங்கில் ஆறுதல் தரலாம்.
டெய்ட் வேகம்:
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்த அணிக்கு, "டுவென்டி-20' "ஸ்பெஷலிஸ்ட்' ஷான் டெய்ட் அதிக நம்பிக்கை தருகிறார். இவருடன் பட்லாந்து, ஓ பிரையன் ஆகியோரும் இணைந்து அசத்துகிறார்கள். தவிர, கிறிஸ்டியன், பெய்லி, ஹாரிசும் வெற்றிக்கு கைகொடுத்தத் தயாராக உள்ளனர்.
முதல் போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி, இன்று வெற்றிபெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும். இதேபோல தெற்கு ஆஸ்திரேலிய அணியும் வெற்றியை தொடர முயற்சிக்கும் என்பதால் ரசிகர்களுக்கு விறு, விறுப்பான போட்டி காத்திருக்கிறது.


No comments:
Post a Comment