டர்பன்: ""பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் அரையிறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி நாயகனாக ஜொலித்தார் ரெய்னா,'' என தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரெய்னா 94 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அரையிறுதியில் அசத்திய ரெய்னாவை பாராட்டிய சென்னை
கேப்டன் தோனி கூறியது:
பீல்டிங்கின் போது ஸ்டைன் காயமடைந்தது பெங்களூரு அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. கடந்த சில தொடர்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் ரெய்னா, மீண்டும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளம் ஒத்துழைக்காத நிலையிலும், பந்துகளை சாதாரணமாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.
இவருக்கு முரளி விஜய் மற்றும் மைக்கேல் ஹசி நன்கு கைகொடுத்தனர். இதனால் தான் சென்னை அணி எளிதாக வென்று, பைனலுக்கு செல்ல முடிந்தது.
நீங்காத நினைவுகள்:
இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டி தான் நாங்கள் இணைந்து விளையாடும் கடைசி தொடர். ஹைடன், மைக்கேல் ஹசி மற்றும் பல சிறப்பான வீரர்கள் அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். நாங்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக பிணைக்கப்பட்டு இருந்தோம்.இவ்வாறு தோனி கூறினார்.
சபாஷ் தோனி
"டுவென்டி-20' அரங்கில் அசைக்க முடியாத கேப்டனாக தோனி திகழ்கிறார். உலக கோப்பை , ஐ.பி.எல்., மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறிய ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2007ல் இந்திய அணிக்கு உலக கோப்பை("டுவென்டி-20') பெற்று தந்தார். அடுத்து 2008 ஐ.பி.எல்., தொடரில் சென்னை கிங்ஸ் அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். 2010ல் சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்று தந்தார். தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கும் சென்னை அணியை அழைத்து சென்றுள்ளார்.
இன்றும் அசத்துவார்களா
சென்னை அணிக்கு இத்தொடரில் பேட்டிங்கை பொறுத்தவரையில் முரளி விஜய் அதிக நம்பிக்கை கொடுத்துள்ளார். இத்தொடரில் இதுவரை 236 ரன்கள் எடுத்து சென்னை அணியில் முதலிடத்தை பிடித்துள்ளார். அடுத்து 201 ரன்கள் குவித்துள்ள ரெய்னா, மைக்கேல் ஹசி (81), தோனி (74) ஆகியோர்கள் இன்றும் கைகொடுத்தால் வெற்றி எளிதாகும்.
பவுலிங்கில் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ள சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், முரளிதரன் (9), வேகப்பந்து வீச்சாளர் போலிஞ்சர் (8), மார்கல் (5), பாலாஜி (5) மற்றும் ரெய்னா (5) போன்றவர்கள் சாதிக்கும் பட்சத்தில், சென்னை அணி முதன் முறையாக கோப்பை வென்று அசத்தலாம்.
பேட்டிங் ராசி தொடருமா
இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் தொடரில், சென்னை அணி இதுவரை ஐந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் நான்கில் "டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்தது. வயம்பா அணிக்கு எதிரான போட்டியில் "டாஸ்' வெல்லவில்லை என்றாலும், சென்னை தான் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்தது.
மொத்தத்தில் ஐந்து போட்டிகளிலும் முதலில் விளையாடிய சென்னை அணி, நான்கில் வெற்றி பெற்றது. விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றிக்கு அருகில் வந்து, பின் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. இன்றும் முதலில் பேட்டிங் செய்து, கோப்பை வெல்லும் என்று நம்புவோம்.
No comments:
Post a Comment