Pages

Saturday, September 25, 2010

பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ்

டர்பன்: சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் பெங்களூரு ராயல் சாலஞ்ர்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதிரடியாக 94 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் திணறிய பெங்களூரு அணி, பரிதாபமாக வெளியேறியது. 


தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று டர்பனில் நடந்த முதலாவது அரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இரண்டுமே இந்திய அணிகள் என்பதால், எதிர்பார்ப்பு எகிறியது.



சென்னை அணியில் ஜகாதி, ஜஸ்டின் கெம்ப் நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், பாலாஜி வாய்ப்பு பெற்றனர். பெங்களூரு அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.

மழை குறுக்கீடு:


சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து நிதான துவக்கம் தந்தனர். பின் பிரவீண் குமார் வீசிய மூன்றாவது ஓவரில் விஜய் ஒரு பவுண்டரி அடித்து, அதிரடிக்கு மாறினார். அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. சென்னை அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்டைன் காயம்:


பின் ஒருவழியாக மழை நிற்க, போட்டி துவங்கியது. சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமானதால், 17 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. வினய் குமார் பந்தை ஹசி(6) தூக்கி அடித்தார். அதனை பின்னோக்கி ஓடியவாறு "சூப்பராக' பிடித்தார் ஸ்டைன். 


அப்போது "பேலன்ஸ்' இல்லாமல் கீழே விழ, தலை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்தார். உடன் களத்தை விட்டு வெளியேறிய இவருக்கு "ஐஸ்' வைத்து ஒத்தடம் கொடுக்கப்பட்டது. பின் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். 

முன்னணி பவுலரான ஸ்டைனுக்கு ஏற்பட்ட காயம் பெங்களூரு அணிக்கு பின்னடைவாக அமைந்தது.



பின் சுரேஷ் ரெய்னா, விஜய் சேர்ந்து அசத்தலாக ஆடினர். யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கிய ரெய்னா, வாணவேடிக்கை காட்டினார். விராத் கோஹ்லி ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார். டு பிரீஸ் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்தார். இது தொடரின் 200வது சிக்சராக அமைந்தது. 


அடுத்த பந்தை அடித்த போது இவரது பேட்டின் நுனி பகுதி உடைந்து பறந்தது. விஜய் 41 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ரெய்னா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர், பெங்களூரு கேப்டன் கும்ளே வீசிய 15வது ஓவரில் இரண்டு பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 19 ரன்கள் விளாசினார். தோனி(11) ஏமாற்றினார். 


ஆல்பி மார்கல்(5) அடித்த பந்தை தாழ்வாக பிடித்த விராத் கோஹ்லி, காயம் அடைந்தது பெங்களூருக்கு இன்னொரு பிரச்னையை ஏற்படுத்தியது. 


இறுதியில் சென்னை அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் குவித்தது. ரெய்னா 94 ரன்களுடன்(48 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.


விக்கெட் மடமட:


கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி, டிராவிட்(0), உத்தப்பா(4), ரோஸ் டெய்லர்(4), விராத் கோஹ்லி(14), ஒயிட்(13) உள்ளிட்ட "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் விரைவில் வெளியேறினர். போராடிய மனிஷ் பாண்டே அரைசதம்(52) கடந்து ஆறுதல் அளித்தார்.


இறுதியில் 16.2 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. "டக்வொர்த் லீவிஸ்' விதிமுறைப்படி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி, பைனலுக்கு தகுதி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment