ஜோகனஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முரளி விஜய், மைக்கேல் ஹசியின் உறுதிமிக்க பேட்டிங், சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது. முரளிதரன், அஷ்வின் சுழலில் சிக்கிய வாரியர்ஸ் அணி, பரிதாபமாக வீழ்ந்தது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், வாரியர்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற வாரியர்ஸ் கேப்டன் டேவி ஜேக்கப்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.
வாரியர்ஸ் அணிக்கு ஜேக்கப்ஸ் அதிரடி துவக்கம் தந்தார். இவர், போலிஞ்சர், ஆல்பி மார்கல் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட, 4 ஓவரில் 39 ரன்கள் எடுக்கப்பட்டன. பிரின்ஸ்(6) ஏமாற்றினார்.
முரளி மிரட்டல்:
இதற்கு பின் சென்னை அணியின் "சுழல்' சூறாவளியில் வாரியர்ஸ் அணி திணறிப் போனது. ரன் வறட்சி ஏற்பட்டதோடு, விக்கெட்டுகளும் வரிசையாக சாய்ந்தன. அஷ்வின் பந்தை "ஸ்வீப்-ஷாட்' அடிக்க பார்த்த ஜேக்கப்ஸ்(34) அவுட்டாக, சிக்கல் ஆரம்பமானது.
மார்கல் வேகத்தில் ரெய்னாவின் சூப்பர் "கேட்ச்சில்' இங்ராம்(16) வீழ்ந்தார். போட்டியின் 14வது ஓவரில் முரளிதரன் இரட்டை "அடி' கொடுத்தார். முதல் பந்தில் ஆபத்தான பவுச்சரை(5) போல்டாக்கினார். 5வது பந்தில் கிருஷ்(17) சிக்கினார். இதையடுத்து 13.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் பாலாஜி வீசிய, போட்டியின் 17வது ஓவரில் தைசன் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. அஷ்வின் பந்தில் போத்தா(7) வெளியேறினார்.
கடைசி ஓவரை கலக்கலாக வீசிய முரளிதரன் தைசன்(25) விக்கெட்டை வீழ்த்தியதோடு, வெறும் 4 ரன் தான் கொடுத்தார். வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டும் எடுத்தது. போயே(8), திரான்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னை அணி சார்பில் சுழலில் அசத்திய முரளிதரன் 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர்.
விஜய் அரைசதம்:
பின், இத்தொடரில் முதல் முறையாக சேஸ் செய்த சென்னை அணிக்கு முரளி விஜய், மைக்கேல் ஹசி இணைந்து அசத்தலான துவக்கம் தந்தனர். நிடினி ஓவரில் விஜய் பவுண்டரிகளாக விளாசினார். போயே பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, அரைசதம் எட்டினார். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடிக்க முயன்ற விஜய் 58 ரன்களுக்கு(6 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார்.
முதல் விக்கெட்டுக்கு விஜய்-ஹசி 103 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா(2), இம்முறை ஏமாற்றினார்.
தோனி அதிரடி:
இதையடுத்து லேசான "டென்ஷன்' ஏற்பட்டது. ஆனாலும், "கேப்டன் கூல்' தோனி நம்பிக்கை தந்தார். திரான் வீசிய போட்டியின் 19வது ஓவரின் 2, 3வது பந்தில் முறையே ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பின் 6வது பந்தில் ஒரு சூப்பர் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து வென்றது.
அரைசதம் கடந்த ஹசி(51), தோனி(17) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற இந்திய அணி என்ற பெருமையை சென்னை கிங்ஸ் பெற்றது.
சொந்த மண்ணில் வாரியர்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.ஆட்ட நாயகன் விருதை விஜய் தட்டிச் சென்றார்.
ரூ. 12 கோடி பரிசு
சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி ரூ. 12 கோடி பரிசுத் தொகையாக தட்டிச் சென்றது. இரண்டாவது இடம் பெற்ற வாரியர்ஸ் அணி, ரூ. 6 கோடி பரிசாக பெற்றது.
தொடர் நாயகன்
சென்னை அணியின் அஷ்வின் இத்தொடரில் சுழலில் அசத்தினார். மொத்தம் 13 விக்கெட் வீழ்த்திய இவர் தொடர் நாயகன் மற்றும் கோல்டன் விக்கெட் விருதுகளை தட்டிச் சென்றார்.
விஜய்க்கு "கோல்டன் பேட்'
சாம்பியன்ஸ் லீக் தொடரில் இம்முறை அபாரமாக பேட் செய்த சென்னை அணியின் முரளி விஜய் அதிக ரன் எடுத்து சாதித்தார். இதற்கான தங்கத்திலான "கோல்டன் பேட்' விருதை பெற்றார். விஜய் 6 போட்டிகளில் 294 ரன் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் வாரியர்ஸ் அணியின் டேவி ஜேக்கப்ஸ்(286 ரன்) உள்ளார்.
வெற்றி கேப்டன்
தோனி தொட்டதெல்லாம் பொன்னாகிறது. இந்திய அணிக்கு 2007ல் உலக கோப்பை("டுவென்டி-20') பெற்று தந்தார். இந்த ஆண்டு சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்று தந்தார். தற்போது சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் கோப்பை வென்று காட்டியுள்ளார்.
-----------
No comments:
Post a Comment