பார்படோஸ்: இந்தியா தனது சூப்பர் எட்டு சுற்றுப் போட்டிகளை இன்று தொடங்குகிறது. பார்படோஸில் இன்று நடைபெறும் போட்டியில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்கிறது.
உலகக் கோப்பை டுவென்டி20 போட்டித் தொடரின் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. இன்று இந்தியா கலந்துகொள்ளும் போட்டி நடைபெறுகிறது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது இந்தியா. லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்காவையும், ஆப்கானிஸ்தானையும் எளிதில் வீழ்த்திய இந்தியா, தனது சூப்பர் எட்டு ஆட்டங்களிலும் வெற்றி நடையைத் தொடர தீவிரமாக உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், யுவராஜ் சிங் நல்ல நிலையில் உள்ளனர். கெளதம் கம்பீரும் விளையாட தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பீரும், விஜய்யும் இணைந்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தால், ரெய்னா தனது அதிரடியைக் காட்டினால், இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.
பந்து வீச்சில் ஆசிஷ்நெஹ்ரா, ஜாகிர்கான் ஆகியோர் கை கொடுப்பார்கள் என நம்பலாம். அதேபோல ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதானும் பந்து வீச்சில் இந்தியாவுக்கு பலம் கூட்ட முயல்வார்கள்.
சுரேஷ் ரெய்னா அதிரடி பேட்டிங்கைக் கட்டுப்படுத்த தனி வியூகம் வகுக்க முயற்சிக்கும் ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியத் தரப்பில் டிர்க் நேன்ஸ், ஷான் டெய்ட், மிட்சன் ஜான்சன், ஷேன் வாட்சன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வருகின்றனர். பேட்டிங்கைப் பொறுத்தவரை டேவிட்வார்னர், மைக்கேல் கிளார்க், டேவிட் ஹஸ்ஸி, மைக்கேல் ஹஸ்ஸி ஆகியோர் சிறப்பாக உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வேகப் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தால் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் பலமாக உள்ளனர். மேலும் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் நல்ல வீர்ர்கள் உள்ளதால், இன்றைய போட்டி நல்ல விருந்தாக அமையும் என நம்பலாம்.
இதுவரை இரு அணிகளும் 3 உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இரண்டு முறை இந்தியா வென்றுள்ளது.
இந்தியத் தரப்பில் அதிக ரன்களைக் குவித்துள்ள வீரர் யுவராஜ் சிங். 101 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மாத்யூ ஹெய்டன் 79 ரன்கள் எடுத்துள்ளார்.
தனி ஒரு வீரரின் அதிகபட்ச ரன்னாக, ரிக்கி பான்டிங் 76 ரன்களும், யுவராஜ் சிங் 70 ரன்களும் எடுத்துள்ளனர்.
பந்து வீச்சில்இந்தியாவின் ஸ்ரீசாந்த் 2விக்கெட்களை வீழ்த்தி 12 ரன்களைக் கொடுத்ததே சிறந்ததாகும். ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் பிரேக்கன் 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதே சிறந்தது.
இந்தியாவின் இர்பான் பதான் அதிகபட்சம் 4 விக்கெட்களையும், ஆஸ்திரேலியாவின் பிரேக்கன்3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்
பழி தீர்க்குமா?:கடந்த 2007, "டுவென்டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. இதற்கு பழிதீர்க்க ஆஸ்திரேலியா முயற்சிக்கலாம்.
இன்றைய போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும், அரையிறுதிக்கு செல்வதற்கு உதவும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
No comments:
Post a Comment