Pages

Monday, June 28, 2010

உலக கோப்பை கால்பந்து "ரவுண்ட்-16' - 27.06.2010 போட்டி

"ரவுண்ட்-16' முதல் போட்டி 
ஜெர்மனி - இங்கிலாந்து ( வெற்றி :  ஜெர்மனி ( 4 - 1 ) )

புளோயம்பாண்டீன், ஜூன் 27: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


ஜெர்மனியின் தாமஸ் முல்லர் அபாரமாக ஆடி இரு கோல்களை அடித்து வெற்றியை எளிதாக்கினார்.

இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளாகக் கருதப்படும் இங்கிலாந்து-ஜெர்மனி அணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் மோதின.


ஆட்டத்தின் துவக்கத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடினாலும், ஜெர்மனி வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே எடுத்துச்சென்றனர். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மிரோஸ்லேவ் க்ளோஸ் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் லூக்காஸ் பொடோல்ஸ்கி கோல் அடித்து ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச்செய்தார்.

37-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மேத்யூ அப்சன் கோல் அடித்து ஆறுதல் அளித்தார். முதல் பாதி ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனி வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.


ஜெர்மனியின் தாமஸ் முல்லர் 67 மற்றும் 70-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ஜெர்மனியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

அதன்பின்னர் இங்கிலாந்து கடுமையாகப் போராடியும் ஜெர்மனி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் கோல் அடிக்க முடியாமல் போனது.


இறுதியில் ஜெர்மனி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட இங்கிலாந்து, ஜெர்மனியிடம் தோற்றதால் போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது.

"ரவுண்ட்-16' இரண்டாம்  போட்டி
அர்ஜென்டினா - மெக்சிகோ ( வெற்றி : அர்ஜென்டினா ( 3 - 1 ) )

ஜோகனஸ்பர்க்: மெக்சிகோ அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் "ரவுண்ட்-16' சுற்று போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு ஜோராக முன்னேறியது. கோல் அடிக்க முடியாமல் திணறிய மெக்சிகோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கான போட்டியில், உலக தரவரிசை பட்டியலில் 7வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா, மெக்சிகோ (17வது இடம்) அணிகள் மோதின.

டெவேஸ் அபாரம்:

துவக்கத்தில் இருந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணி வீரர்கள், தங்களுக்கு கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை வீணடித்தனர்.


இந்நிலையில் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் பந்தை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி அருமையாக "பாஸ்' செய்தார். அதனை பெற்ற கார்லோஸ் டெவேஸ், தலையால் முட்டி கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினா அணிக்கு ஹிகுவேன், 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். 


இதற்கு மெக்சிகோ வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அர்ஜென்டினா ஆதிக்கம்:

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு, ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் கார்லோஸ் டெவேஸ், 23 மீட்டர் தொலைவில் இருந்து ஒரு சூப்பர் கோல் அடித்து அசத்தினார். பின்னர் சுதாரித்துக் கொண்ட மெக்சிகோ அணிக்கு, ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். இருப்பினும் மெக்சிகோ அணியினரால் அடுத்தடுத்து கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை கால்பந்து அரங்கில் 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியது. மெக்சிகோ அணி பரிதாபமாக வெளியேறியது. ஆட்ட நாயகனாக கார்லோஸ் டெவேஸ் தேர்வு செய்யப்பட்டார்.


இதன்மூலம், வரும் ஜூலை 3ம் தேதி டர்பனில் நடக்கும் காலிறுதியில் அர்ஜென்டினா அணி, ஜெர்மனி அணியை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டங்கள்


1 ) நெதர்லாந்து-ஸ்லோவேகியா, இடம்: டர்பன்நேரம்: இரவு 7.30.

2) பிரேசில்-சிலி, இடம்: ஜோகன்னஸ்பர்க்நேரம்: இரவு 12.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment