Pages

Tuesday, June 29, 2010

உலக கோப்பை கால்பந்து "ரவுண்ட்-16' - 28.06.2010 போட்டி

நெதர்லாந்து - ஸ்லோவேகியா ( வெற்றி : நெதர்லாந்து ( 2  - 1 ) )

டர்பன், ஜூன் 28: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேகியாவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.


தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த அணியான நெதர்லாந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் ஸ்லோவேகியாவை எதிர்கொண்டது.


ஆட்டம் துவங்கியதிலிருந்தே அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணிக்கு 18-வது நிமிடத்தில் அந்த அணியின் ராபென் கோல் அடித்தார்.

இதன்பிறகு முதல் பாதி ஆட்டம் முழுவதும் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.


இரண்டாவது பாதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஸ்லோவேகியா, நெதர்லாந்து அணிக்கு கடும் சவாலை அளித்தது. 84-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெஸ்லே கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


கடைசி வரை தொடர்ந்து போராடிய ஸ்லோவேகியா அணிக்கு ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் கிடைத்தது.


அந்த அணியின் ராபர்ட் இந்த கோலை அடித்தார். இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவை வீழ்த்தி நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

பிரேசில் - சிலி ( வெற்றி : பிரேசில் ( 3 - 0 ) )

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில், "ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி, 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்கமுடியாமல் தோல்வியடைந்த சிலி அணி, தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.


தென் ஆப்ரிக்காவில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த "ரவுண்டு-16' போட்டியில் உலகின் "நம்பர்-1' அணியான பிரேசில், 18வது இடத்திலுள்ள சிலியை சந்தித்தது.


போட்டி துவங்கியது முதல் சிலி அணியினர், கோல் அடிப்பதை விட, தற்காப்பு ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். பிரேசில் அணியினரின் பல கோல் வாய்ப்புகளை, சிலி அணியினர் முறியடித்து வந்தனர். போட்டியின் 9வது நிமிடத்தில் பேபியானோ அடித்த பந்தை, சிலி கோல் கீப்பர் பிராவோ அசத்தலாக தடுத்தார். ஆனால் இது நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.

பிரேசில் முன்னிலை:


ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு "கார்னர் கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை மைகான், சிலியின் கோல் ஏரியாவுக்குள் அடிக்க, அங்கிருந்த ஜுவான் அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். அடுத்த சில நிமிடங்களில் (38வது நிமிடம்) பிரேசிலின் பேபியானோ, ஒரு கோல் அடிக்க, பிரேசில் வலுவான முன்னிலை பெற்றது. இது, இத்தொடரில் இவர் அடிக்கும் மூன்றாவது கோல் ஆகும்.
பதிலடி தர, சிலி அணியினர் நடத்திய தாக்குதல்கள் வீணானது. இதையடுத்து முதல் பாதியில் பிரேசில் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

மீண்டும் கோல்:

இரண்டாவது பாதி துவங்கியதும் சிலி அணியினர், பிரேசில் பகுதிக்குள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் 59 வது நிமிடத்தில் பிரேசிலின் ரொபினியோ, இந்த உலக கோப்பை தொடரில், தனது முதல் கோல் அடிக்க, பிரேசில் 3-0 என அசைக்கமுடியாத முன்னிலை பெற்றது.

பிரேசில் வெற்றி:


ஆட்டநேர முடிவில் இரு அணியும், மேலும் எதுவும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில், பிரேசில் அபார வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. ஒரு கோல் கூட அடிக்க முடியாத சோகத்தில், சிலி அணி பரிதாபமாக வெளியேறியது.

வரும் ஜூலை 2ம் தேதி, போர்ட் எலிசபெத்தில் நடக்கும் காலிறுதியில் பிரேசில் அணி, நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

1) பராகுவே-ஜப்பான், இடம்: பிரிட்டோரியா,

நேரம்: இரவு 7.30.

2) ஸ்பெயின்-போர்ச்சுகல், இடம்: கேப்டவுன்,

நேரம்: இரவு 12.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment