Pages

Tuesday, June 29, 2010

செம்மொழி மாநாட்டு நேரடிச் செலவுகள் ரூ.69 கோடி : கருணாநிதி

கோவையில் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடர்பான நேரடிச் செலவுகள் ரூ.69 கோடி என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.


இதுதொடர்பாக கோவையில் திங்கட்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

"கடந்த 23 ஆம் தேதி தொடக்க விழாவில் பந்தலில் கூடியிருந்தோர் சுமார் 2 லட்சம் பேர். அன்று மாலையில் நடைபெற்ற 'இனியவை நாற்பது' என்ற தலைப்பிட்ட கலை, இலக்கிய, வரலாற்று ஊர்திகளின் அணிவகுப்பில் சாலையின் இருபுறமும் நின்று கண்டு களித்தோர் சுமார் 5 லட்சம் பேர்.

24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாட்களிலும் மாநாட்டுப் பந்தலில் நடந்த கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றங்களில் தினமும் சராசரியாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். பொதுக் கண்காட்சி அரங்குகளிலும் மணிக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரையிலும், தினமும் 13 மணி நேரம் சுமார் 40 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். மொத்தம் இதுவரை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் முதல் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.

மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்டுள்ள சிறப்பு மலரில் 129 கட்டுரைகள், 34 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு, கட்டுரையாளர்களுக்கு 3,200 மலர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,300 மலர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மாநாட்டிற்கான சிறப்பு மலர். இதுதவிர வேறு சில மலர்களும் - ஏடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட மலர்களும் இந்தக் கணக்கிலே வராது.

தமிழ் இணைய தள மாநாட்டில் மொத்தம் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் 110; அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பதிவு செய்து அதன்படி கலந்து கொண்டவர்கள் 300 பேர். தமிழ் ஆய்வரங்க அறிஞர்களில் கலந்து கொண்டவர்கள் 200; எனவே மொத்தம் கலந்து கொண்டவர்கள் - 500 பேர்கள்.

தினமும் ஒரு முகப்பரங்கம் வீதம் 4 முகப்பரங்குகள் நடத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றிலும் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இணைய தள மாநாட்டினையொட்டியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் 130 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

பொது கண்காட்சிக்கு வந்த அனைவரும் இணையக் கண்காட்சியினைக் கண்டு சென்றனர். ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைக் கண்டு சென்றிருக்கிறார்கள்.

அரசு சலுகை விலையில் உணவு வழங்கும் உணவுக்கூடங்களில் மாநாடு நடந்த 5 நாட்களும் மொத்தமாக சுமார் நான்கு லட்சம் பேருக்கு முப்பது ரூபாய் சலுகை விலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விருந்தினர்கள் தங்கியிருந்த ஓட்டல்கள் 92. தங்கியிருந்த அறைகள் 1,642. தங்கியிருந்த விருந்தினர்கள் எண்ணிக்கை 2,605.

மாநாடு தொடர்பான நேரடி செலவுகள் ரூ.69 கோடி. மாநாட்டை ஒட்டி கோவை நகரிலும் சுற்று வட்டாரத்திலும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் செலவு அதாவது பாலங்கள், சாலைகள், புதிய சாலைகள், பழுது பார்க்கப்பட்ட சாலைகள் என்ற நிலையில் 243 கோடி ரூபாய்.

24 ஆம் தேதி முதல் 27 வரையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆய்வரங்குகள் மொத்த அமர்வுகள் 239. மொத்த கட்டுரைகள் 913. மொத்த பொருண்மைகள் 55. வருகை தந்த வெளிநாட்டினர் 840 பேர். கலந்து கொண்ட நாடுகள் 50. கட்டுரைகள் தாக்கல் செய்தவர்கள் 152 பேர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து 4 ஆய்வாளர்கள், கனடா - 11 ஆய்வாளர், சீனா 1 ஆய்வாளர், செக் 1 ஆய்வாளர், பின்லாந்து 1 ஆய்வாளர், பிரான்ஸ் 3 ஆய்வாளர், ஜெர்மனி 5 ஆய்வாளர், கிரீஸ் 1 ஆய்வாளர், ஹாங்காங் 1 ஆய்வாளர், இத்தாலி 1 ஆய்வாளர், ஜப்பான் 2 ஆய்வாளர், மலேசியா 23 ஆய்வாளர், மொரீஷியஸ் 3 ஆய்வாளர், நெதர்லாந்து 2 ஆய்வாளர் நிïசிலாந்து 1 ஆய்வாளர், ஓமன் 1 ஆய்வாளர், ரஷ்யா 1 ஆய்வாளர், சிங்கப்பூர் 22 ஆய்வாளர். தென்னாப்பிரிக்கா 3 ஆய்வாளர், தென்கொரியா 1 ஆய்வாளர், இலங்கை 38 ஆய்வாளர், தாய்லாந்து 2 ஆய்வாளர், யுனைடெட் அரப் எமிரேட்ஸ் 1 ஆய்வாளர், இங்கிலாந்து 9 ஆய்வாளர், அமெரிக்கா 14 ஆய்வாளர் ஆக மொத்தம் 152 பேர்," என்றார் முதல்வர் கருணாநிதி.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment