Pages

Thursday, June 24, 2010

உலக கோப்பை கால்பந்து 23 .06 .2010 ஆட்டம் - ஒரு பார்வை

ஜெர்மனி - கானா ( வெற்றி : ஜெர்மனி ( 1 - 0 ) )

ஜோகனஸ்பர்க்: கானா அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியடைந்து கானா அணி, 4 புள்ளிகளுடன் கோல் அடிப்படையில் "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு தகுதிபெற்றது.



தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ஜோகனஸ்பர்கில் நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி, கானா (32வது இடம்) அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.


 துவகத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெர்மனியின் பொடோல்ஸ்கி, முல்லர் மேற்கொண்ட முயற்சிகள், கானா அணியினரால் தடுக்கப்பட்டது. இரு அணியினரும் தங்களுக்கு கிடைத்த "கார்னர் கிக்' வாய்ப்புகளை வீணடிக்க, முதல் பாதியின் முடிவு 0-0 என பரிதாபமாக இருந்தது.


இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட ஜெர்மனி அணிக்கு, 60வது நிமிடத்தில் ஓசில் ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய கானா அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இதன்மூலம் 6 புள்ளிகள் பெற்ற ஜெர்மனி, "டி' பிரிவில் இருந்து முதல் அணியாக முன்னேறியது. இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், 4 புள்ளிகள் பெற்ற கானா அணி கோல் அடிப்படையில், "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு ஜெர்மனி அணியுடன் இணைந்து சென்றது.

ஜெர்மனி-இங்கிலாந்து மோதல்: இதன்மூலம் "டி' பிரிவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி அணி, "ரவுண்ட் ஆட் 16' சுற்றில் வரும் 27ம் தேதி புளோயம்போன்டைன் நகரில் நடக்கும் போட்டியில், "சி' பிரிவில் 2வது இடம் பிடித்த இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

இதேபோல "டி' பிரிவில் 2வது இடம் பிடித்த கானா அணி, வரும் 26ம் தேதி ரஸ்டன்பர்க் நகரில் நடக்கும் "ரவுண்ட் ஆப் 16' போட்டியில், "சி' பிரிவில் முதலிடம் பிடித்த அமெரிக்கா அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.


ஆஸ்திரேலியா - செர்பியா ( வெற்றி: ஆஸ்திரேலியா  ( 2 - 1 ) ) 

நெல்ஸ்புரூட்: நேற்று நெல்புரூட் நகரில் நடந்த மற்றொரு "டி' பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள செர்பியா, ஆஸ்திரேலியா (20வது இடம்) அணிகள் மோதின. 


துவக்கம் முதல் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவ்விரு அணிகள், முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் திணறின. இதனால் முதல் பாதியின் முடிவு (0-0) இரு அணி வீரர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஆஸ்திரேலிய அணிக்கு காஹில் (69வது நிமிடம்), ஹால்மேன் (73வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து நம்பிக்கை அளித்தனர். 


தொடர்ந்து போராடிய செர்பிய அணிக்கு பான்டலிச் (84வது நிமிடம்) ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 


இதன்மூலம் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணி, கோல் அடிப்படையில் (-3 கோல்) அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதேபோல 3 புள்ளிகள் மட்டும் பெற்ற செர்பிய அணியும், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இங்கிலாந்து - சுலோவேனியா ( வெற்றி : இங்கிலாந்து ( 1 - 0 ) )

போர்ட் எலிசபெத்: உலக கோப்பை கால்பந்து தொடரின் முக்கிய லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, சுலோவேனியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 


நேற்று "சி' பிரிவில் நடந்த முக்கிய லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிசுலோவேனியாவை(25வது இடம்) எதிர்கொண்டது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்கியது.



துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடின. ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் சுலோவேனிய வீரர் பிர்சா அடித்த பந்து கோல் போஸ்டில் இருந்து விலகிச் சென்றது. 


இதற்கு பின் இங்கிலாந்து வீரர்கள் வெய்ன் ரூனே, லாம்பார்ட், ஜெரார்டு மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் மில்னர், பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். அதனை பெற்ற ஜெர்மைன் டீபோ, மின்னல் வேகத்தில் கோல் அடித்தார். 

இதற்கு சுலோவேனியாவால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. 48வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடிக்கும் வாய்ப்பை டீபோ நழுவவிட்டார். 


இறுதியில் இங்கிலாந்து அணி 1-0 என வெற்றி பெற்றது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய "ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறியது. சுலோவேனியா பரிதாபமாக வெளியேறியது.

அமெரிக்கா-அல்ஜீரியா (வெற்றி : அமெரிக்கா ( 1 - 0 ) )

பிரிடோரியா: அமெரிக்கா-அல்ஜீரியா அணிகள் மோதிய, "சி' பிரிவு லீக் போட்டி பிரிடோரியாவில் நேற்று நடந்தது. இதில் இரு அணி வீரர்களும் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, 89 நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.


கடைசி நிமிடத்தில் எழுச்சி கண்ட அமெரிக்க அணிக்கு, டொனோவான் ஒரு சூப்பர் கோல் அடித்து கைகொடுக்க, 1-0 என்ற கோல் கணக்கில் "திரில்' வெற்றி பெற்றது.


இதன்மூலம் மூன்று லீக் போட்டியில் ஒரு வெற்றி, 2 "டிரா' உட்பட 5 புள்ளிகள் பெற்ற அமெரிக்கா, "சி' பிரிவில் இருந்து இங்கிலாந்து அணியுடன் இணைந்து, "ரவுண்ட் ஆப் 16' சுற்றுக்கு முன்னேறியது. அல்ஜீரிய அணி, தொடரிலிருந்து வெளியேறியது.

இன்றைய ஆட்டங்கள்

* ஸ்லோவேகியா-இத்தாலி, இடம்: ஜோகன்னஸ்பர்க், நேரம்: இரவு 7.30.

* பராகுவே-நியூசிலாந்து, இடம்: போலக்வானே, நேரம்: இரவு 7.30.

* டென்மார்க்-ஜப்பான், இடம்: ரஸ்டன்பர்க், நேரம்: இரவு 12.

* கேமரூன்-நெதர்லாந்து, இடம்: கேப்டவுன், நேரம்: இரவு 12.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment