முதல் ஆட்டம்
சுலோவேனியா-அல்ஜீரியா (வெற்றி சுலோவேனியா 1 - 0 )
போலக்வானே: சுலோவேனியா கால்பந்து வரலாற்றில் நேற்று மகிழ்ச்சியான நாள். அல்ஜீரியாவை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று போலக்வானேயில் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 25வது இடத்தில் உள்ள சுலோவேனியா அணி, அல்ஜீரீயாவை(30வது இடம்) எதிர்கொண்டது.
அதிரடி தாக்குதல்:
முதல் பாதியில் இரு அணிகளும் அதிரடி தாக்குதல் நடத்தின. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் "பிரீகிக்' மூலம் அல்ஜீரியாவின் நாதிர் பெல்ஹாட்ஜ் அடித்த பந்து கோல் பகுதியை நோக்கி வந்ததது. இதனை கவனித்த சுலோவேனியா கீப்பர், சமிர் ஹாண்டனோவிச் உயரே பறந்து அருமையாக தடுத்தார். பின் 36வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ஹாலிச்சி, கோல் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் சுலோவேனியாவின் பிர்சா அடித்த பந்தை அல்ஜீரிய கீப்பர் பாவ்சி சாவ்ச்சி சூப்பராக தடுக்க, முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
.
அல்ஜீரியா சோகம்:
இரண்டாவது பாதியில் அல்ஜீரியாவுக்கு சோகமே மிஞ்சியது. 73வது நிமிடத்தில் இந்த அணியின் அப்துல் காதர் கேசல், "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.
இதனை பயன்படுத்திக் கொண்ட சுலோவேனிய கேப்டன் ராபர்ட் கோரன், ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் சாமர்த்தியமாக கோல் அடித்தார். இம்முறை அல்ஜீரியா கோல்கீப்பர் பாவ்சி சாவ்ச்சி அலட்சியமாக செயல்பட்டதால், கோல் வாய்ப்பை தடுக்க முடியவில்லை.இறுதியில் சுலோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, 3 புள்ளிகளை பெற்றது.
கடந்த 2002ல் உலக கோப்பை தொடருக்கு முதன் முறையாக தகுதி பெற்ற சுலோவேனியா அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. தற்போது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இரண்டாம் ஆட்டம்
செர்பியா - கானா ( வெற்றி - கானா ( 1 - 0) )
பிரிட்டோரியா: உலக கோப்பை லீக் போட்டியில் "பெனால்டி கிக்' மூலம் கானா அணி, செர்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று பிரிட்டோரியாவில் நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில் கானா, செர்பிய அணிகள் மோதின.
இளம் வீரர்களை கொண்ட கானா அணி துவக்கத்தில் இருந்தே தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை இந்த அணியின் அசமாவ் கியான் வீணாக்கினார். மறுபக்கம் செர்பிய வீரர்களின் முயற்சியும் எடுபடாததால், முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இரண்டாவது பாதியில் செர்பிய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. 74வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட அலெக்சாண்டர் லூகோவிச் "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 வீரர்களுடன் செர்பியா விளையாட நேர்ந்தது.
பின் கஸ்மனோவிச், பந்தை கையால் தொட்டு தவறு செய்ய, கானா அணிக்கு "பெனால்டி கிக்' வாய்ப்பு தரப்பட்டது. இதனை பயன்படுத்தி 85வது நிமிடத்தில் கானா வீரர் அசமாவ் கியான் சூப்பர் கோல் அடிக்க, ஆப்ரிக்க ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இறுதியில் கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்ரிக்க மண்ணில் நடக்கும் இத்தொடரில், முதல் வெற்றியை பெற்ற ஆப்ரிக்க அணி என்ற பெருமையை பெற்றது.
முன்றாம் ஆட்டம்
ஆஸ்திரேலியா - ஜெர்மனி ( வெற்றி : ஜெர்மனி ( 4 - 0 ) )
டர்பன்: உலக கோப்பை கால்பந்து தொடரை, மூன்று முறை "உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
தென் ஆப்ரிக்காவில், 19வது "பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று டர்பனில் உள்ள மோசஸ் மபிடா மைதானத்தில் நடந்த "டி பிரிவு லீக் போட்டியில், உலக ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை (20வது இடம்) எதிர்கொண்டது.
பொடோல்ஸ்கி அபாரம்:
துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், 17வது முறையாக உலக கோப்பை அரங்கில் காலடி வைத்துள்ள ஜெர்மனி அணியினர் முன்பு, இவர்களது ஆட்டம் எடுபடவில்லை. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் "பாஸ் செய்த பந்தை லூகாஸ் பொடோல்ஸ்கி கோலாக மாற்ற, ஜெர்மனி அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அசத்திய ஜெர்மனி அணிக்கு, 26வது நிமிடத்தில் மிராஸ்லாவ் குளோஸ், 2வது கோல் பெற்றுத்தந்தார். ஆஸ்திரேலிய அணியினர் கிடைத்த இரண்டு "கார்னர் கிக் வாய்ப்புகளை வீணடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள், தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணிக்கு முல்லர் (68வது நிமிடம்), ககாயூ (70வது நிமிடம்) தலா ஒரு கோலடித்து நம்பிக்கை அளித்தனர்.
கடைசி வரை போராடிய ஆஸ்திரேலிய அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பொடோல்ஸ்கி தேர்வு செய்யப்பட்டார்.












1 comment:
keep it daily
Post a Comment