தம்புலா: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் "ஹாட்ரிக்' வெற்றியை எதிர்பார்த்து களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும். தவிர, இப்போட்டி பைனலுக்கான சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. வரும் 24ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்னதாக இன்று தம்புலாவில் நடக்கும் முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இரு அணிகளும் ஏற்கனவே வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பதால், தொடர்ந்து மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கின்றன.
பேட்டிங் பலம்:
இந்திய அணியின் பேட்டிங், வழக்கம் போல் வலுவாக உள்ளது. வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முறையே 82, 83 ரன்கள் விளாசிய காம்பிர் அருமையான "பார்மில்' உள்ளார். பாகிஸ்தானுடனான போட்டியில் அரைசதம் கடந்த கேப்டன் தோனி மற்றும் ரெய்னா அதிரடியாக ரன் சேர்ப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது.
விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரது ஆட்டம் தான் ஏமாற்றம் அளிக்கிறது. இவர்கள் இன்று சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இலங்கையை எளிதில் வீழ்த்தலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரை அனுபவ ஜாகிர், ஹர்பஜன், பிரவீண் குமார் இருப்பதால் கவலை இல்லை. ஆஷிஷ் நெஹ்ரா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். ஆனாலும், வாய்ப்பு பெறுவது சந்தேகமே. இவருக்கு பதில் இன்று அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறலாம்.
பவுலிங் பலம்:
சொந்த மண்ணில் இலங்கை அணி அசத்தி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக 126 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. பாகிஸ்தானையும் வென்று காட்டியது.
கேப்டன் சங்ககரா, தில்ஷன், ஜெயவர்தனா, ஏஞ்சலோ மாத்யூஸ் ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகின்றனர். தரங்கா, கபுகேதரா அவ்வப்போது கைகொடுக்கின்றனர். மலிங்கா, குலசேகரா, வெலகேதரா, முரளிதரன் அடங்கிய பலமான பந்துவீச்சு கூட்டணி, இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்கலாம்.
சேவக்கிற்கு பதில் கார்த்திக்
இந்திய அணியின் துவக்க வீரர் சேவக், தொடை பகுதியில் ஏற்பட்ட பிடிப்பால் அவதிப்படுகிறார். இதையடுத்து இவர் நாடு திரும்புகிறார். இவருக்கு மாற்றாக தமிழக வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் இடம் பெறுகிறார். இவர், நேற்று இலங்கை சென்றார். இன்று நடக்கும் போட்டியில் கார்த்திக் விளையாட வாய்ப்பு உள்ளது.
முன்னதாக நேற்று நடந்த போட்டியில் பாக்., ஆறுதல் வெற்றி
தம்புலா: வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில், கேப்டன் அப்ரிதி சதமடித்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
இலங்கையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தம்புலாவில் நேற்று நடந்த லீக் போட்டியில், ஏற்கனவே பைனல் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, பேட்டிங் தேர்வு செய்தார்.
அப்ரிதி அபாரம்:
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் பர்கத் (66), ஷசாய்ப் ஹசன் (50) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த உமர் அமின் (22), ஆசாத் ஷாபிக் (17) ஏமாற்றினர். பின்னர் களமிறங்கிய உமர் அக்மல் (50) நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய அப்ரிதி, 60 பந்தில் 124 ரன்கள் (4 சிக்சர், 17 பவுண்டரி) எடுத்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (34) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த இம்ருல் கெய்ஸ் (66), சித்திக் (97) ஜோடி ஆறுதல் அளித்தது. அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் (1), கேப்டன் சாகிப் அல் ஹசன் (25) ஏமாற்றினர். வங்கதேச அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்து, 139 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment