தமிழின் தொன்மை, தனித்தன்மை, முதன்மைச் சிறப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழ், உலக முதல் தாய்மொழியாக, உலகத் தமிழாக விளங்குகிறது என்று மாநாட்டுக்குத் தலைமை வகித்த தமிழக முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் கூறினார்.
உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் இதுவரை எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்போது நடைபெறும் இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு.
முன்பு நடந்தவை "உலகத் தமிழ் மாநாடுகள்'. தற்போது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும்.
தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. இதை மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "ஞாலமொழி தமிழே' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல்வடிவில் உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே, உலக முதல் தாய்மொழி என்ற தகுதியைப் பெறுகிறது என்றார்.
பின்லாந்து நாட்டின் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்குவதற்கான தகுதிச்சான்றுப் பட்டயத்தை நிதியமைச்சர் க. அன்பழகன் மேடையில் வாசித்தார்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக முதல்வர் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டினைப் பாராட்டினார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். தமிழறிஞர்கள் வா.செ.குழந்தைசாமி பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், செம்மொழி விருது பெற்ற அஸ்கோ பர்ப்போலா ஆகியோர் பேசினர். தமிழக அரசின் தலைமைச் செயலர் கே. எஸ். ஸ்ரீபதி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment