Pages

Thursday, June 24, 2010

குலுங்கியது கோவை!- செம்மொழி மாநாட்டை துவக்கி வைத்தார் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் முதல் நாள் படங்கள்

கோவை :கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று துவக்கி வைத்தார். மாநாட்டு மலரை கவர்னர் வெளியிட, ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். "கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, ஜனாதிபதி வழங்கினார். மாலையில் பேரணி நடந்தது. மாநாட்டு துவக்க நாளான நேற்று, மக்கள் வெள்ளத்தில் கோவை குலுங்கியது.


கோவை "கொடிசியா' வளாகத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நேற்று காலை துவங்கியது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலா, முனைவர் வா.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் காலை 10.00 மணிக்கு மேடைக்கு வந்தனர்.அதன்பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மேடைக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு தேசிய கீதத்துடன் மாநாடு துவங்கியது.


சீர்காழி சிவசிதம்பரம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழித் தமிழ் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல் இசைத்தட்டு ஒளிபரப்பப்பட்டது.துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். ஜனாதிபதிக்கு முதல்வர் கருணாநிதி, நினைவுப்பரிசு வழங்கினார். கவர்னருக்கு துணை முதல்வர், நினைவுப்பரிசு வழங்கினார். மாநாட்டில் பங்கேற்ற தமிழ் அறிஞர்களுக்கு துணை முதல்வர், நினைவுப்பரிசு வழங்கினார்.அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வா.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மலரை கவர்னர் வெளியிட, ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். பேராசிரியர் அஸ்கோ பர்போலா குறித்த தகுதியுரையை நிதி அமைச்சர் அன்பழகன் வாசித்தார்.பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கப்பட்டது. விருதை, ஜனாதிபதி வழங்கினார். விருதுடன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஐம்பொன் திருவள்ளுவர் சிலையும் வழங்கப்பட்டன.விருது பெற்ற பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரையாற்றினார்.


முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றினார். கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா சிறப்புரையாற்றினார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மாநாட்டு சின்னத்தை திறந்து வைத்து துவக்க உரையாற்றினார். தலைமைச் செயலர் ஸ்ரீபதி நன்றி கூறினார்.மாநாட்டில் உலகத் தமிழ் அறிஞர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


கொடிசியா பொது அரங்கில் நடந்த மாநாட்டு துவக்க விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொடிசியா அரங்கம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டது. கோவையில் அவினாசி ரோடு முழுவதும் வண்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


குலுங்கியது கோவை: வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் நேற்று முன்தினமே கோவை வந்தனர். அவர்கள் தங்கியிருந்த பகுதிகளிலும், ஜனாதிபதி, முதல்வர் ஆகியோர் தங்கியிருந்த பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கோவை மாநாட்டில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநாடு நடக்கும் இடத்தில் ரகசிய கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 


கோவைக்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து அனுமதித்தனர். மாநாட்டில் கலந்து கொள்ள வெளிமாவட்டத்தில் இருந்து கோவைக்கு வந்தவர்களின் வாகனங்களை புறநகர் பகுதியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, சிறப்பு வாகனங்கள் மூலம் மாநாட்டுக்கு அனுப்பினர்.


மாநாட்டுக்கு ஜனாதிபதி, முதல்வர் ஆகியோர் சென்றபோது அவினாசி ரோட்டில் காலை 10.00 மணி முதல் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.நேற்று மாலை 3.50 மணிக்கு, இனியவை நாற்பது என்ற பெயரில், தமிழக சிறப்புக்களை விளக்கும் பேரணி நடைபெற்றது. மாநாட்டுத் திடலை பேரணி அடைந்தவுடன், அங்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமிழக கவர்னர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.


செம்மொழி மாநாடு துவக்க விழா துளிகள் : * மாநாடு முறைப்படி துவங்குவதற்கு முந்தைய நிமிடம் வரை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மைய நோக்குப் பாடல் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.


* பெரியசாமி, வேலு, சுரேஷ் ராஜன் உட்பட அனைத்து அமைச்சர்களும், வி.ஐ.பி.,க்களும் அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்தனர். அடையாள அட்டையை கழுத்தில் மாட்டியிருந்த இன்னொரு முக்கிய வி.வி.ஐ.பி., ஸ்டாலின்.

* அமைச்சர் நேரு, சட்டைப்பையில் அடையாள அட்டையை வைத்திருக்க, வைரமுத்து, கனிமொழி உள்ளிட்டோர் அட்டையை பொருட்படுத்தவில்லை.

* வி.ஐ.பி.,க்களுக்கான பகுதியில் மட்டும் மின்விசிறி பொருத்தப்பட்டிருந்தது.

* காலை 10.07 மணிக்கு பின்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திடீரென முன்னோக்கி ஓடினர். முன்பகுதி அதுவரை காலியாக விடப்பட்டிருந்தது. சிலர், மரத்தடுப்புகளின் மீது ஏறியும், குனிந்தும் முண்டியடித்தபடி சென்றனர். போலீசார் தடுக்கவோ, ஒழுங்குபடுத்தவோ முனையவில்லை.

* சரியாக காலை 10.26 மணிக்கு மேடைக்கு சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அதுவரை ஒலிபரப்பப்பட்ட மைய நோக்குப்பாடல் நிறுத்தப்பட்டு, நாதஸ்வர இன்னிசை ஒலிபரப்பாக துவங்கியது.

* இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாதஸ்வர இன்னிசையில் வாசிக்கப்பட்ட, "மகா கணபதி' பாடலை தாளமிட்டு ரசித்தார்.

* காலை 10.29 மணிக்கு அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர வைக்கப்பட்டிருக்க, நிதியமைச்சர் அன்பழகன், அவர்களை மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி வரவேற்றார்.

* சரியாக 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி மேடைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்; கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் அதேசமயம் மேடைக்கு வந்தார். முதல்வர் வந்ததும், "தமிழ் மொழி வாழ்க, செம்மொழி வாழ்க' என முதல்வரை வாழ்த்தும் வகையிலான பாடல் இசைக்கப்பட்டது.

* ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 10.32 மணிக்கு மேடைக்கு வந்தார். அவருக்கு பொன் மஞ்சள் நிறத்திலான பொன்னாடையை முதல்வர் வழங்கினார்.

* முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது; முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர்.

* தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்தை, சீர்காழி சிவசிதம்பரம் பாடினார்.

* துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

* துணை முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டதும், மாநாட்டுப் பந்தலில் உற்சாகச் சலசலப்பு.

* ஜனாதிபதியை தமிழக மக்கள் சார்பிலும்; கவர்னரை, விழா தலைமைக்குழு சார்பிலும்; முதல்வரை தமிழக மக்கள் சார்பிலும் வரவேற்றார். வரவேற்புக்குழு சார்பில் அமைச்சர்கள், மக்கள் பிரதிகள், மொழி வல்லுனர்கள், பொதுமக்களை வரவேற்றார்.

* ஸ்டாலின் பேசும் போது, தேவநேயப்பாவாணரின் தமிழ் இனிமை, புதுமை என, "மை' விகுதி அமையும்படி பேச, அரங்கம் முழுவதும் கரகோஷம். ஒண்டமிழ், தண்டமிழ், தேன்தமிழ், தீந்தமிழ் என அடுத்தடுத்து தமிழை எப்படி எல்லாம் சிறப்பிக்கின்றனர் என அடுக்கு மொழியில் பேச, அரங்கத்தினரோடு, முதல்வரும் ரசித்துக் கேட்டார்.

* ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு துணை முதல்வர் நினைவுப்பரிசு வழங்க, மற்றவர்கள் அமர்ந்தபடி பெற்றுக் கொண்டனர். அன்பழகன், ஜார்ஜ் ஹார்ட் மட்டும் எழுந்து நின்று பெற்றுக் கொண்டனர்.

* ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலோ, சிவத்தம்பி, குழந்தைசாமி என சிறப்பு விருந்தினர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் தங்களின் வாழ்த்துரையை முடித்துக் கொண்டனர்.

* வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் வணக்கம் சொன்னபோது, அரங்கத்தில் மீண்டும் கரவொலி; குழந்தைசாமி தவிர, மற்ற மொழி அறிஞர்கள் ஆங்கிலத்தில் பேசினர்.

* குழந்தைசாமியின், "விருந்துக்கு பெயர் பெற்றது தமிழர் பண்பாடு; கொங்கு மண்டலம் அதில் தலைமைப்பீடம்; கோவை அதற்குத் தலைமையகம்' என்ற பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது.

*மாநாடு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, அரங்கில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாநாடு அரங்கம் அருகிலுள்ள மொபைல் கழிவறைகளுக்கு சென்ற பிரமுகர்கள் பலரும், தண்ணீர் சப்ளையின்றி குழாய்களில் காற்று வந்ததை கண்டு, அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, ஊழியர்களை உடனடியாக வரச்செய்து, தண்ணீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்தார்.

* மாநாடு முடிந்து வெளியேறிய மக்கள், "கொடிசியா' சாலை வழியே கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். இதனால், அச்சாலை முழுவதும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment