துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலில், இந்திய துவக்க வீரர் சேவக், "நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய துவக்க வீரர் சேவக் 863 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் கடந்ததன்மூலம் இவர், "நம்பர்-1' இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. இதேபோல இலங்கை அணிக்கு எதிராக, 2வது இன்னிங்சில் அரைசதமடித்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 7வது இடத்துக்கு முன்னேறினார்.
பேட்டிங்கில் ஏமாற்றிய இந்தியாவின் காம்பிர் (10வது இடம்), லட்சுமண் (15வது), டிராவிட் (18வது), கேப்டன் தோனி (40வது) உள்ளிட்டோர் பின்தள்ளப்பட்டனர். இலங்கை அணியின் சங்ககரா, மகிலா ஜெயவர்தனா முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் நீடிக்கின்றனர்.
முரளிதரன் முன்னேற்றம்:
பவுலர்களுக்கான ரேங்கிங்கில், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், 3வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், பாகிஸ்தானின் ஆசிப் முதலிரண்டு இடத்தில் உள்ளனர். பவுலிங்கில் சொதப்பிய இந்தியாவின் இஷாந்த் சர்மா (22வது இடம்), பிரக்யான் ஓஜா (58வது) பின்தள்ளப்பட்டனர்.


No comments:
Post a Comment