சிங்கப்பூர், ஜூலை 1: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.
ஐக்மோகன் டால்மியாவுக்குப் பிறகு இந்த உயரிய பதவியை வகிக்கும் இரண்டாவது இந்தியர் சரத் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் ஆண்டு கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. ஒருவாரம் நடைபெற்ற இந்தக் கூட்டம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இந்நிலையில் ஐசிசி தலைவராக இருந்த டேவிட் மோர்கனின் 2 ஆண்டு பதவிக்காலம் வியாழக்கிழமை முடிவடைந்ததை அடுத்து, ஐசிசி புதிய தலைவராக பவார் பொறுப்பேற்றார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் தொடர்வார்.
69 வயதாகும் பவார், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராகவும் முன்பு பொறுப்பு வகித்துள்ளார். இதுவரை ஐசிசி துணைத் தலைவராகவும் அவர் இருந்தார். இதற்கு முன்னர் 1997-ல் இந்தியாவின் ஜக்மோகன் டால்மியா ஐசிசி தலைவராக இருந்தார்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பவார், ""கடந்த 2 ஆண்டுகளாக ஐசிசி தலைவராக இருந்த டேவிட் மோர்கன் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஐசிசியை சிறந்த கொள்கைகளின் அடிப்படையில் வழிநடத்திச் சென்றார். அவரது வழியை கடைபிடிப்பதே இப்போது எங்களுக்கு உள்ள பொறுப்பு.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து அடுத்த ஆண்டு நடத்தவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பாக நடத்தப்படும். மும்பை தாக்குதலுக்குப் பின் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வந்து கிரிக்கெட் விளையாடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இரு நாட்டு அரசுகளும் இந்த விஷயத்தில் சாதகமான முடிவு எடுத்தால் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.
ஐசிசி துணைத் தலைவர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்ட்டின் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் எந்த அரசியல் காரணமும் இல்லை'' என்றார் அவர்.
இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக சரத் பவார் உள்ளார். பல்வேறு கிரிக்கெட் அமைப்புகளில் பல உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். அண்மையில் ஐபிஎல் கிரிக்கெட் பூனா அணியை வாங்க அவர் மறைமுக முயற்சி மேற்கொண்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பவார் இதனைத் திட்டவட்டமாக மறுத்தார்.
No comments:
Post a Comment