போர்ட் எலிசபெத்: உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய முதல் காலிறுதிப் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இதில் பிரேசில் அணி வெற்றி பெறும் பட்சத்தில், 11வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறலாம்.
முதல் காலிறுதி ( பிரேசில் - நெதர்லாந்து ) 07:30PM
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 19வது "பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போர்ட் எலிசபெத் நகரில் இன்று நடக்கும் முதல் காலிறுதியில், "பிபா' உலக தரவரிசை (ரேங்கிங்) பட்டியலில் "நம்பர்-1' இடத்தில் உள்ள பிரேசில் அணி, நெதர்லாந்து ("நம்பர்-4') அணியை எதிர்கொள்கிறது.
பேபியானோ நம்பிக்கை:
லீக் சுற்றில் அசத்திய பிரேசில் அணி, "ரவுண்ட்-16' போட்டியில் சிலியை வீழ்த்தி, 14வது முறையாக காலிறுதிக்கு தகுதிபெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடி வரும் லூயிஸ் பேபியானோ, இலானோ, மைகான், ரொபினியோ, ஜுயன், கில்பெர்டோ சில்வா, கேப்டன் லூசியோ உள்ளிட்ட வீரர்கள், நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய காலிறுதியில் சாதிக்கும் பட்சத்தில், சுலபமாக அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இதுவரை ஒரு கோல் கூட அடிக்காத நட்சத்திர வீரர் காகா எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தவிர பயிற்சியாளர் துங்காவின் அனுபவம் இன்றைய போட்டியில் நிச்சயம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சியாளர் துங்கா கூறுகையில்,
""நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய காலிறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். இப்போட்டி பைனல் போன்று இருக்கும் என எதிர்பார்க்கிறேன். வீரர்கள் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சுலப வெற்றி பெற முடியும்,'' என்றார்.
கைகொடுப்பாரா ஸ்னைடர்:
லீக் சுற்றில் "ஹாட்ரிக்' வெற்றி கண்ட நெதர்லாந்து அணி, சுலோவேகியா அணிக்கு எதிரான "ரவுண்ட்-16' போட்டியில் வெற்றி பெற்று, 5வது முறையாக உலக கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த போட்டிகளில் கலக்கிய ஸ்னைடர், ராபின் வான் பெர்சி, கிளாஸ் ஜான் ஹன்டிலார், டெர்க் குயிட், அர்ஜென் ராபென் உள்ளிட்டோர், பிரேசில் அணிக்கு எதிரான இன்றைய காலிறுதியில் கைகொடுக்கும் பட்சத்தில், 4வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறலாம்.
இதுகுறித்து நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விச் கூறுகையில், ""பிரேசில் அணிக்கு எதிரான இன்றைய காலிறுதிப் போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். எங்கள் தற்காப்பு பகுதி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருப்பது சாதகமான விஷயம். ஒருவேளை போட்டியின் முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு செல்லும் பட்சத்தில், பிரேசில் அணிக்கு எதிராக சாதிக்க தேவையான பயிற்சி மேற்கொண்டுள்ளோம்,'' என்றார்
இரண்டாவது காலிறுதி ( உருகுவே - கானா ) 12:00AM
இன்றைய இரண்டாவது காலிறுதிப் போட்டியில் யில் உருகுவே - கானா அணிகள் மோதுகின்றன. கானா சிறிய அணி என்றாலும் லீக் மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு வந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த அணி என்பதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்த அணி வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். எனவே உருகுவே வீரர்களுக்கு இந்தப் போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment