போர்ட் எலிசபெத், ஜூலை 9: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி-உருகுவே அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தபோட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் இன்று இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. அரை இறுதியில் ஸ்பெயினிடம் தோற்ற ஜெர்மனியும், நெதர்லாந்திடம் வீழ்ந்த உருகுவேயும் மூன்றாவது இடத்தைப் பிடிக்க கடுமையாகப் போராடும் என்பதால் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
உலகக் கோப்பையை வெல்லும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெர்மனி இந்த ஆட்டத்தில் உருகுவே அணிக்கு கடும் சவாலை அளிக்கும்.
இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஜெர்மனி வீரர் க்ளோஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த ஆட்டத்தில் விளையாடாத முன்னணி வீரர் தாமஸ் முல்லர் இந்த ஆட்டத்தில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். 4 கோல்கள் அடித்துள்ள முல்லர் இந்த ஆட்டத்தில் கோல் அடிக்கும் பட்சத்தில் 5 கோல்கள் அடித்துள்ள டேவில் வில்லாவை சமன் செய்வார்.
நேரடி ரெட் கார்டு பெற்று கடந்த ஆட்டத்தில் விளையாட தடை செய்யப்பட்ட உருகுவேயின் முன்னணி வீரர் சுரேஜ், இந்த ஆட்டத்தில் களமிறங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலம். அவர் டீகோ ஃபோர்லானுடன் இணைந்து ஜெர்மனிக்கு நெருக்குதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியாவிட்டாலும் மூன்றாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ற கனவோடு இரு அணிகளும் களமிறங்குகின்றன.

No comments:
Post a Comment