Pages

Tuesday, July 6, 2010

இறுதி ஆட்டத்தில் நுழைவது யார்?- அரை இறுதியில் இன்று நெதர்லாந்து-உருகுவே மோதல்

கேப்டவுன், ஜூலை 5: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதியில் நெதர்லாந்து-உருகுவே அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.


கேப்டவுன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 12 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது. இரு அணிகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இ பிரிவில் இடம்பெற்றிருந்த நெதர்லாந்து அணி முதல் சுற்றில் அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றது.

காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேகியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பையை வெல்லும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரேசிலை காலிறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது நெதர்லாந்து. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது நெதர்லாந்து அணி.

பலம் வாய்ந்த பிரேசிலை வீழ்த்திய உற்சாகத்துடன் அரை இறுதியில் உருகுவேயை எதிர்கொள்கிறது. மேலும் அந்த அணியின் முன்னணி வீரர்கள் வெஸ்லி ஸ்நீஜ்டெர், ராபின் வான் பெர்ஸி, டிர்க் குயிட் ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல் அடித்து வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவர்களின் அதிரடி கோல் மழை இந்த ஆட்டத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நெதர்லாந்து வீரர் வெஸ்லி அதிகபட்சமாக 3 கோல்கள் அடித்துள்ளார்.

உருகுவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணி. எனவே பிரேசிலுடனான வெற்றியை மறந்துவிட்டு உருகுவேக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும் என்று நெதர்லாந்தின் பயிற்சியாளர் பெர்ட்வான் மார்விக் தமது அணி வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் போட்டியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தென்அமெரிக்க கண்டத்திலிருந்து அரை இறுதிக்கு முன்னேறியிருக்கும் ஒரே நாடு உருகுவேதான்.

ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு 2 வெற்றி 1 டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது உருகுவே.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2-1 என்ற கணக்கில் தென்கொரியாவையும், காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் மூலம் கானாவையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதியில் நெதர்லாந்துடன் வெற்றிபெற உருகுவே கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

முன்னணி வீரர்களான டீகோ ஃபோர்லான், மேக்ஸி பெரைரா, பெர்னாண்டஸ் ஆகியோரை நம்பியே உருகுவே களம் இறங்குகிறது. கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்ட லூயிஸ் சுரேஜ் இந்த ஆட்டத்தில் விளையாடாதது உருகுவே அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கால்பந்து ரசிகர்களின் கவனம் முழுவதும் தற்போது உருகுவே அணி மீது திரும்பியுள்ளது. அவர்களின் முழு ஆதரவும் உருகுவே அணிக்குத்தான்.

எனவே இரு அணிகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும் என்றாலும், நெதர்லாந்து அணிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்பது கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment