Pages

Tuesday, August 3, 2010

இலங்கையுடன் இன்று 3 வது மோதல்

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்புவில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 


காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இதனையடுத்து தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகிக்கிறது இலங்கை அணி. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, இன்று கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் துவங்குகிறது.

இந்தியா எழுச்சி:


இலங்கை தொடரின் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அதிரடி எழுச்சி பெற்றது. இன்றைய மூன்றாவது டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சேவக், சச்சின், ரெய்னாவின் ஆட்டம் இந்திய அணியின் ரன் குவிப்புக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. அனுபவ வீரர்களான டிராவிட், லட்சுமண் இருவரும் "பார்முக்கு' திரும்ப வேண்டியது அவசியம்.

காம்பிர் இல்லை:


முழங்கால் காயம் காரணாக இரண்டாவது டெஸ்டில் இடம் பெறாத காம்பிர், இன்று துவங்கும் மூன்றாவது டெஸ்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த போட்டியில் அரை சதம் கடந்த முரளி விஜய், தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

யுவராஜா...ரெய்னாவா...?:


காய்ச்சல் குணமான நிலையில், இன்றைய போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார் யுவராஜ். ஆனால் இரண்டாவது டெஸ்டில் இவருக்குப் பதில் அறிமுக வீரராக களமிறங்கி சதம் அடித்து சூப்பர் பார்மில் உள்ளார் ரெய்னா. இதனால் இருவரில் யாரை களமிறக்குவது என்பதில் கேப்டன் தோனி, குழப்பத்தில் உள்ளார். இருவரும் இடம் பெறும் பட்சத்தில், லட்சுமண் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஹர்பஜன் சந்தேகம்:


இத்தொடரின் ஆரம்பம் முதலே காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வரும், ஹர்பஜன், இன்று பங்கேற்பது சந்தேகம் தான். இவருக்குப் பதில், அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் கொழும்பு மைதானத்தில், கூடுதல் பவுலராக முனாப் படேல் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

வருகிறார் மலிங்கா:

சொந்த மண்ணில் அசத்தி வருகிறது இலங்கை அணி. பரணவிதனா, சங்ககரா, ஜெயவர்தனா, தில்ஷன், சமரவீரா ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். காயம் காரணமாக 2 வது டெஸ்டில் இடம் பெறாத லசித் மலிங்கா, இன்று பங்கேற்க உள்ளார். இது இலங்கை அணியின் பந்து வீச்சை பலமடங்கு பலப்படுத்தி உள்ளது. மெண்டிஸ், ரந்திவ் ஜோடி வழக்கம் போல சுழலில் அசத்த காத்திருக்கிறது.

வெற்றி தேவை:

கொழும்புவில் இன்று துவங்கும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரை சமன் செய்ய முடியும். தோல்வி அடைந்தாலோ, "டிரா' செய்தாலோ தொடரை இழக்க நேரிடும். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகம் உள்ளது. அதே சமயம் இப்போட்டியை "டிரா' செய்தாலே தொடரை வென்று விடலாம் என்பதால், மிகவும் "ரிலாக்சாக' களமிறங்குகிறது இலங்கை அணி.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment