எங்கெங்கு காணினும் வெற்றியடா! : ஏழுகடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா! : முத்தமிழ் அறிஞர் முதல்வர் வாழ்த்து!
எந்திரன்' பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் கருணாநிதி பிரத்யேகமாக வாழ்த்து தெரிவித்தார். நவீன தொழில்நுட்பமான எச்.டி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அவரது வாழ்த்து கோலாலம்பூர் விழாவில் திரையிடப்பட்டது. அதில் முதல்வர் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்காக & பொதுவாக உலகத் தமிழர்களுக்காக & எந்திரம் போல் உழைத்துக் கொண்டிருக்கின்ற எனக்கு, ‘எந்திரன்‘ திரைப்படத்தை பற்றி சிலவற்றை சொல்லக் கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
‘எந்திரன்‘ படம் இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாகும். சன் பிக்சர்ஸ் தம்பி கலாநிதி மாறன் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் என் இனிய நண்பர் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கும் பிரமாண்டமான படம். கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் பிழிந்தெடுக்கும் ஆற்றல் பெற்ற இயக்குனர் ஷங்கர், கலை உலகில் இருக்கின்ற அற்புத திறனாளிகள் பலருடைய திறமையை வெளிப்படுத்தி இயக்கியுள்ள திரைப்படம் ‘எந்திரன்‘.
மனிதநேயம் கொண்டவரும் மனதில் அப்பழுக்கின்றி மாசற்ற மாணிக்கங்களில் ஒருவராக விளங்குபவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரும்பாடுபட்டு வெளிக்கொணரும் இந்தப் படம் பெரும்புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.
பொன்குடத்திற்கு பொட்டு வைத்தால், அதன் பொலிவைப் புகலவும் வேண்டுமோ! ஆம், நமது ஆஸ்கார் நாயகன் தம்பி ஏ.ஆர்.ரகுமான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நோக்கப் பாடலுக்கு இசையமைத்து இமயப் புகழ் பெற்றதை அடுத்து, ‘எந்திரன்‘ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார்.
ஒப்பனை செய்துகொள்ளவே ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் வரை ரஜினிகாந்த் செலவிட்டு இருக்கிறார் என்றால், அவர் எடுத்துள்ள சிரமத்திற்கு, கொடுத்துள்ள உழைப்புக்கு ஈடு இணையற்ற பரிசாக இந்த ‘எந்திரன்‘ வெளிவர இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் பத்துக்கு மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.
இந்த ‘எந்திரன்‘ படத்தின் மூலம், ‘எங்கெங்கு காணினும் வெற்றியடா! "எந்திரன்" படம் ஏழுகடல் தாண்டியும் முழங்குமடா!’ என திரையுலகம் திரும்பத் திரும்ப பாடத்தான் போகிறது. இவ்வாறு முதல்வர் வாழ்த்தியுள்ளார்.

No comments:
Post a Comment