கொழும்பு: கொழும்பில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் போட்ட அபாரமான சதத்தால் இந்தியா வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி பெற்றது. 2வது போட்டி டிரா ஆனது. இந்த நிலையில் 3வது போட்டி கொழும்பில் நடந்து வந்தது.
முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 425 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய இந்தியா பதிலடி கொடுத்து 436 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 267 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சற்றே கஷ்டமான இலக்குடன் இந்தியா தனது வெற்றி வேட்டையை தொடங்கியது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில், முரளி விஜய், ஷேவாக், டிராவிட் ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மூத்த வீரர்களான சச்சினும், வி.வி.எஸ். லட்சுமணும் சிறப்பாக ஆடினர். மிகவும் பொறுப்போடு நிதானமாக ஆடிய அவர்கள் இந்தியாவை வெற்றிக் கோட்டைத் தாண்ட செய்து தொடரை சமன் செய்ய உதவினர்.
சச்சின் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுபக்கம் லட்சுமண் சிறப்பாக ஆடி சதம் போட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்களைக் குவித்தார் லட்சுமண். அவருக்குத்துணையாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 41 ரன்களைக் குவித்தார்.
இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக லட்சுமண் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக வீரேந்திர ஷேவாக் தேர்வானார்.







No comments:
Post a Comment