Pages

Friday, August 6, 2010

வெற்றியை நோக்கி இந்தியா : இலங்கை தடுமாற்றம்

கொழும்பு: சேவக் சதம், லட்சுமண் மற்றும் ரெய்னா அரை சதம் அடித்து அசத்த, கொழும்பு டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 436 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, முன்ணனி விக்கெட்டுகளை விரைவில் இழந்து தடுமாறி வருகிறது.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் "டிராவில்' முடிந்தது. இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 
 

இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி, 425 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (40), சேவக் (97) அவுட்டாகாமல் இருந்தனர்.

சேவக் சதம்: 

நேற்று 3 ம் நாள் ஆட்டம் நடந்தது. கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்த நிலையில், சச்சின் (41) அவுட்டானார். மறுமுனையில் டெஸ்ட் அரங்கில் 21 வது சதம் கடந்தார் சேவக். 19 பவுண்டரி உட்பட 109 ரன்கள் குவித்த சேவக், ரந்திவ் சுழலில் வெளியேறினார்.

முதல் அரை சதம்: 

பின்னர் லட்சுமண், ரெய்னா இணைந்தனர். இந்த ஜோடி, இலங்கை பந்து வீச்சை சமாளித்து ஆடி ரன் சேர்த்தது. டெஸ்ட் அரங்கில் 44 வது அரை சதம் கடந்த லட்சுமண், மெண்டிசிடம் சரணடைந்தார். இவர் 56 ரன்கள் சேர்த்தார். இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த ரெய்னா (62), டெஸ்ட் அரங்கில் முதல் அரை சதம் கடந்து வெளியேறினார். 

லட்சுமண், ரெய்னா ஜோடி 5 வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த கேப்டன் தோனி (15), சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி பெரும் ஏமாற்றம் அளித்தார்.

சூப்பர் ஜோடி: 

சற்றும் எதிர்பாராத வகையில் 8 வது விக்கெட்டுக்கு இணைந்த மிதுன், அமித் மிஸ்ரா ஜோடி, அபாரமாக ஆடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறினர். அரை சதம் அடிக்கும் வாய்ப்பை<, நூலிழையில் தவற விட்டார் மிதுன் (46). மிஸ்ரா 40 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 64 ரன்கள் குவிக்க, இந்திய அணி 400 ரன்களை கடந்தது. 

அடுத்து வந்த இஷாந்த் (8) சொதப்பினார். 106.1 ஓவர் முடிவில் ஆல்-அவுட்டான இந்திய அணி, 436 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 11 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை தரப்பில் ரந்திவ் 4, மலிங்கா 3, மெண்டிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

விக்கெட் வீழ்ச்சி: 


பின் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு, சேவக்கின் பந்து வீச்சு அதிர்ச்சி அளித்தது. துவக்க வீரர்களான பரணவிதனா (16), தில்ஷன் (13) இருவரையும் அவுட்டாக்கி, நம்பிக்கை அளித்தார் சேவக். 


இந்நிலையில் 3 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 16 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 45 ரன்கள் சேர்த்தது. சங்ககரா (12), ரந்திவ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். தற்போது இலங்கை 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வெற்றி கிடைக்குமா?:

இன்றைய 4 வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். இலங்கை அணியின் எஞ்சியுள்ள 8 விக்கெட்டுகளை, விரைவில் கைப்பற்றும் பட்சத்தில், இந்தியா வெற்றியை எட்ட வாய்ப்பு உள்ளது.

வெற்றிக்கு முயற்சிப்போம்: சேவக்


கொழும்பு டெஸ்டில் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்போம் என்றார் இந்திய வீரர் சேவக். இது குறித்து அவர் கூறுகையில்,"" கொழும்பு டெஸ்டில் சதம், 2 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய 4 வது நாள் ஆட்டத்தில் சங்ககரா மற்றும் ஜெயவர்தனாவின் விக்கெட்டை விரைவில் கைப்பற்ற வேண்டியது அவசியம். 

அதற்குப் பின் ஆட்டம், இந்தியாவுக்கு சாதகமாக அமையும். இலங்கை அணியை 200 ரன்களுக்குள் சுருட்டி விட்டால், வெற்றி பெற்று விடலாம்,'' என்றார்
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment