டர்பன்:சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், இன்று நடக்கும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், கும்ளேவின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேற சென்னை கிங்ஸ் அணி தயாராக உள்ளது.
தென் ஆப்ரிக்காவில், 2வது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இரு அணிகளும் இந்தியா சார்பில் களமிறங்கி உள்ள ஐ.பி.எல்., அணிகள் என்பதால், இப்போட்டியின்மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடுத்த "ரன்- ரேட்':சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் வாரியர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் தலா 6 புள்ளிகளுடன் சென்னை, வாரியர்ஸ், விக்டோரியா அணிகள் இருந்தன. இதில் "ரன்-ரேட்' அடிப்படையில் சென்னை, வாரியர்ஸ் அணிகள் "ஏ' பிரிவில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறின.
சென்னை அணியின் பேட்டிங்கில் தமிழக வீரர் முரளி விஜய் நம்பிக்கை அளித்து வருகிறார். இவர், 4 லீக் போட்டியில் 2 அரைசதம் உட்பட 195 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரர் மைக்கேல் ஹசி அரைசதமடித்து எழுச்சி கண்டிருப்பது பேட்டிங் பலத்தை அதிகரித்துள்ளது. இதேபோல கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத், அனிருதா ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அதிரடி காட்டினால் வலுவான ஸ்கோரை எட்டி, பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
சென்னை அணியின் மிகப்பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. சுழலில் அனுபவ முரளிதரன், அஷ்வின், ஜகாதி உள்ளிட்டோர் அசத்துகின்றனர். இன்றும் இவர்களது விக்கெட் வேட்டை தொடரலாம். அஷ்வின், 4 லீக் போட்டியில் மொத்தம் 10 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். வேகப்பந்துவீச்சில் போலிஞ்சர் அசத்தி வருகிறார்.
பெங்களூரு அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. டிராவிட், ராபின் உத்தப்பா, விராத் கோஹ்லி, கேமிரான் ஒயிட் என அனுபவ வீரர்கள் நிறைய இருக்கின்றனர். கடந்த சில போட்டிகளில் விராத் கோஹ்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். காயம் காரணமாக காலிஸ் இல்லாதது பின்னடைவுதான்.
ஸ்டைன் அசத்தல்:பெங்களூரு அணியின் மிகப்பெரும் பலம் வேகப்பந்துவீச்சு. வேகத்தில் ஸ்டைன், பிரவீண் குமார், வினய் குமார் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். சுழலில் கேப்டன் கும்ளே கைகொடுக்கும் பட்சத்தில், சென்னை அணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சிக்கலாகிவிடும்.
No comments:
Post a Comment