Pages

Saturday, September 11, 2010

சாதிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்!: இன்று சென்ட்ரல் அணியுடன் மோதல்

டர்பன்: சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாதிக்க தயாராகிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று தனது முதல் மோதலில் நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியை சந்திக்கிறது (இரவு 9 மணிக்கு) .

தென் ஆப்ரிக்காவில் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது.


இதில் மும்பை, பெங்களூரு, கயானா, வயம்பா என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று "ஏ' பிரிவில் நடக்கும் முதல் லீக் போட்டியில் ஐ.பி.எல்., சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

பேட்டிங் ஆறுதல்:

சென்னை அணிக்கு துவக்க வீரர் ஹைடன் நம்பிக்கை தரலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக "ரன்மழை' பொழிந்து சதம் அடித்த தமிழகத்தின் முரளி விஜய் மீண்டும் கைகொடுக்க வேண்டும். "மிடில் ஆர்டரில்' மைக்கேல் ஹசி, பத்ரிநாத், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் அசத்த காத்திருக்கிறார்கள். கடந்த ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் குவித்த இளம் சுரேஷ் ரெய்னா, இத்தொடரிலும் சாதித்து காட்ட வேண்டும். தவிர, தனது "கூலான' செயல்பாட்டினால் கேப்டன் தோனி, சென்னை அணிக்கு வெற்றி துவக்கம் தரலாம்.

போலிங்கர் நம்பிக்கை:

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் பின்பகுதியில் அணியில் இணைந்த போலிஞ்சர் அசத்தலான வேகத்தில் மிரட்டினார். இவருடன் பாலாஜி, துஷாரா ஆகியோரும் உதவவேண்டும். தவிர, சுழலில் அஷ்வின், மீண்டும் வெற்றிதேடித் தர முயற்சிக்க வேண்டும். அனுபவ முரளிதரன், இளம் ஜகாதியும் தங்கள் பங்கிற்கு பந்தை சுழற்றலாம்.

வெற்றி நம்பிக்கை:

நியூசிலாந்தின் சென்ட்ரல் டிஸ்டிரிக்ட்ஸ் அணி இத்தொடரில் புதியதாக பங்கேற்கிறது. இது சீனியர் மற்றும் இளம் வீரர்களின் கலவையாக உள்ளது. கேப்டன் ஜெமி ஹவ், இங்ராம், மாத்யூ சின்கிளைர் ஆகிய சீனியர்கள் பேட்டிங்கில் ரன்குவிக்கலாம். பிரேஸ்வெல், ஜார்ஜ் ஒர்க்கர், டிம் வெஸ்டன் போன்ற "ஆல் ரவுண்டர்கள்' சென்னை அணிக்கு சிக்கல் தருவார்கள். தவிர, மைக்கேல் மாசன், ஆடம் மில்னே, சேத் ரான்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அணிக்கு ஆறுதல் தரலாம்.

முதல் போட்டி  வாரியர்ஸ் - வயம்பா லெவன்ஸ் மாலை 5 மணிக்கு

போர்ட் எலிசபெத்: "ஏ' பிரிவில் இன்று மாலை நடக்கும் முதல் போட்டியில் இலங்கையின் வயம்பா லெவன்ஸ், தென் ஆப்ரிக்காவின் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வயம்பா அணியில் இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஜெயவர்தனா, ஜெகன் முபாரக், பவுலர்கள் மெண்டிஸ், பர்வேஷ் மகரூப், வெலகேதரா, ஹெராத் போன்றவர்கள் இணைந்திருப்பது கூடுதல் பலம்.
வாரியர்ஸ் அணியும் சளைத்தது அல்ல.

தென் ஆப்ரிக்க அணியின் "டுவென்டி-20' கேப்டன் ஜோகன் போத்தா, ஆஷ்வெல் பிரின்ஸ், பவுச்சர், டிசாட்சொபெ, நிடினி மற்றும் ஜூவான் தியரான் போன்ற நட்சத்திர வீரர்கள் சொந்த மண்ணில் சாதிக்க முயற்சிக்கலாம்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment