Pages

Saturday, September 11, 2010

மும்பை இந்தியன்ஸ் அதிர்ச்சி தோல்வி

ஜோகனஸ்பர்க்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் ஹைவெல்ட் லயன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தென் ஆப்ரிக்காவில், 2வது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடுகின்றன. 

ஜோகனஸ்பர்க் நகரில் நேற்று நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தென் ஆப்ரிக்காவின் ஹைவெல்ட் லயன்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின், "பீல்டிங்' தேர்வு செய்தார்.

வான்டியர் அபாரம்:


முதலில் பேட் செய்த லயன்ஸ் அணிக்கு ஜோனாதன் வான்டியர், கேப்டன் அல்விரோ பீட்டர்சன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 24 ரன்கள் சேர்த்த போது பீட்டர்சன் (12) "ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த ரிச்சர்ட் கேமரான் (9), வான் ஜார்ஸ்வெல்டு (13) நீடிக்கவில்லை.

சூப்பர் ஜோடி:


பின்னர் இணைந்த வான்டியர், நீல் மெக்கன்சி ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மும்பை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த போது வான்டியர் (71), மலிங்கா வேகத்தில் வெளியேறினார். 

அடுத்து வந்த ராபர்ட் பிரைலிங்க் (1) சோபிக்கவில்லை. மற்ற வீரர்கள் ஓரளவு கைகொடுக்க லயன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது. 

மெக்கன்சி (56), ஜான்டர் டி பிரையன் (12) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் லசித் மலிங்கா 3, அலி மொர்டசா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சச்சின் அசத்தல்:


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியஸ் அணிக்கு சச்சின், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த போது தவான் (32) அவுட்டானார். 


அடுத்து வந்த அம்பதி ராயுடு (3) சோபிக்கவில்லை. மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சச்சின் அரைசதமடித்து அசத்தினார். அடுத்து வந்த டுமினி (30), போலார்டு (19), சதீஷ் (10) ஓரளவு ரன் சேர்த்தனர். 


மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டும் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. லயன்ஸ் அணியின் ஷேன் பர்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment