ரஜினியின் எந்திரன் படத்துக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. பல ஆயிரம் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
முதல் மூன்று தினங்களுக்கான காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவின் முதல் பிரமாண்டப் படம் என்ற முத்திரையுடன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் அக்டோபர் முதல் தேதி வெளியாகிறது எந்திரன். இந்தப் படத்துக்கான முன்பதிவு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இரு வாரங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
இந்தியாவில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் கடந்த வாரம் முன்பதிவு தொடங்கியது.
இந்த நிலையில் அனைத்துத் திரையரங்குகளிலும் இன்று முதல் எந்திரனுக்கு முன்பதிவு துவங்கும் என படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள திரையரங்குகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்க்கவே பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் விரும்புகின்றனர். எனவே பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்று கொளுத்தும் வெயிலில் வரிசையில் டிக்கெட்டுகளுக்காக நின்றனர்.
பல திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. சில குறிப்பிட்ட தியேட்டர்களில் ஒரு வாரம் முழுவதற்குமான டிக்கெட்டுகளை பல்க் புக்கிங் முறையில் விற்றிருந்தனர்.
இதனால் ரசிகர்கள் பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சில அரங்குகளில் மட்டும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கு டிக்கெட் கிடைத்தது. அவ்வாறு கிடைக்கப்பெற்ற ரசிகர்கள், மற்ற தியேட்டர்களில் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களை அழைத்து டிக்கெட் பெற வைத்ததும் நடந்தது.
சென்னையில் மட்டும் 34 திரையரங்குகளில் எந்திரன் தமிழ்ப் படம் வெளியாகிறது. இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் வெளியாகின்றன. சென்னை புறநகரில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகள் எந்திரனை வெளியிடுகின்றன. மாயாஜால் அரங்கில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட காட்சிகள் எந்திரன் திரையிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 1450 திரையரங்குகளிலும், உலகமெங்கும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளிலும் எந்திரன் வெளியாகிறது.
சென்னை நகருக்குள் அனைத்து திரையரங்குகளிலுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்டது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனாலும் ரஜினி படம் என்பதால் அந்த கூடுதல் செலவு பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment