செப்டம்பர் 24ந் தேதி வெளிவர வேண்டிய எந்திரன் அக்டோபர் 1ந் தேதிதான் வெளிவருகிறது. இந்த ஒரு வார தள்ளிப் போடலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கோடம்பாக்கத்தில் சொல்லப்படுகிற முக்கியமான காரணம் வேறொன்று. அதற்கு முன்னால் ஒரு கேள்வியும் பதிலும் ரொம்ப ரொம்ப அவசியமாகிறது இந்த இடத்தில்! வெளிநாட்டில் படங்கள் வெளியாகும் நடிகர்கள் பட்டியலில் ஆர்யாவும் சேர்ந்திருக்கிறார்.
இவரது பாஸ் என்கிற பாஸ்கரன் யுகேயிலும் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆபிஸில் 34வது இடத்தைப் பிடித்தது. இதன் ஓபனிங் வீக் எண்ட் கலெக்ஷன் 2,0765 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 14.83 லட்சங்கள். கலெக்ஷன் 25 லட்சத்தை தொட்டால் பாஸ்கரன் யுகே.யிலும் பாஸாகிவிட்டான் என்று உறுதியாகச் சொல்லலாம்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்யாவிடம், பாஸ் என்கிற பாஸ்கரனுக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னும் சில வாரங்களில் எந்திரன் வந்துவிடும். நீங்க எந்திரன் வந்தபின் ஒரு மாதம் கழிச்சி ரிலீஸ் பண்ணியிருந்தா நல்லாயிருக்குமே, எந்திரன் வந்தால் பாஸ்கரனின் கதி.... என்று கேள்வி எழுப்பப்பட, "வந்தா என்ன பண்றது. அவ்ளோதான் நம்ம படம்" என்றார் ஆர்யா. சிரித்துக் கொண்டே அவர் சொன்னாலும், ரொம்ப வருஷம் கழிச்சு எனக்கொரு வெற்றி கிடைச்சுருக்கு.
அதை அவ்வளவு சீக்கிரம் பொலி போடணுமா என்ற வேதனை மறைந்து கிடந்தது அந்த பதிலில். இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசனாக இருந்தாலும், உலகம் முழுக்க படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான்.
நல்லா போற படத்தை பொலி போடணுமா என்ற கேள்வி அவர் மனதிலும் எழுந்ததாக கூறப்படுகிறது. எந்திரன் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இவருக்கும் ஒரு புரிந்துணர்வு பேச்சு வார்த்தை நடந்ததாகவும் அதையடுத்துதான் எந்திரன் ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டிருப்பதாகவும் பேச்சு.
இதை விட சுவாரஸ்யமான இன்னொரு செய்தி. என்னங்க சரக்குக்கு சைட் டிஷ் மாதிரியா? ஆமாங்க..சைட் டிஷ் மட்டுமில்ல சாதனையுங்கூட! பொதுவாக அமெரிக்காவில் ஒரு வாரம் முன்புதான் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் எதிர் பார்ப்பையும் அடுத்து 2 வாரம் முன்பே 'எந்திரன்' முன்பதிவு தொடங்கிவிட்டது.
நியூயார்க் நகரத்தில் 'எந்திரன்' படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய பத்து நிமிடங்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்தாக ஜாக்சன் ஹைட்ஸ் என்ற திரையரங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் எந்திரன் டிக்கெட் விற்பனையில் அமெரிக்காவில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்த முதல் இந்திய படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர். இந்திய மதிப்பு படி 1150 ரூபாய். இந்த மதிப்புக்கு, ஹாலிவுட் படத்தின் டிக்கெட் கூட விற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ ஒண்ணாந்தேதி திருவிழாவுக்கு உலகமே ரெடி.
No comments:
Post a Comment