ஜோகனஸ்பர்க்: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி சூப்பராக முன்னேறியது. நேற்று நடந்த முக்கிய லீக் போட்டியில் லயன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லயன்ஸ் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞர்ஸ், லயன்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின. இப்போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.
காலிஸ் காயம்:
கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, பெங்களூரு அணியின் காலிஸ், இத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதில் மனிஷ் பாண்டே வாய்ப்பு பெற்றார். டாஸ் வென்ற லயன்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
பீட்டர்சன் அபாரம்:
லயன்ஸ் அணிக்கு கேப்டன் அல்விரோ பீட்டர்சன் அதிரடி துவக்கம் தந்தார். பிரவீண் குமார் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். நான்காவது ஓவரில் வினய் குமார் இரட்டை "அடி' கொடுத்தார். வாண்டிர்(11), கேமரானை(0) அடுத்தடுத்து வெளியேற்றினார். பின் வந்த ஜார்ஸ்வெல்ட் தடுத்து ஆட, வினய் குமாரின் "ஹாட்ரிக்' வாய்ப்பு பறிபோனது. ஜார்ஸ்வெல்ட்(24) ரன் அவுட்டானார்.
கும்ளே அசத்தல்:
இதற்கு பின் சுழலில் கலக்கினார் பெங்களூரு கேப்டன் கும்ளே. லயன்ஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்திய இவர், ஆபத்தான பீட்டர்சனை(45) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.
மெக்கன்சி 39 ரன்கள் எடுத்தார். டு பிரீஸ் வீசிய கடைசி ஓவரில் பிரைலின்க் இரண்டு இமாலய சிக்சர்கள் அடிக்க, லயன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. பிரைலின்க்(22) அவுட்டாகாமல் இருந்தார்.
அசத்தல் துவக்கம்:
எட்டக் கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு அனுபவ டிராவிட், மனிஷ் பாண்டே இணைந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். பவுண்டரிகளாக விளாசிய டிராவிட் (33), பாங்கிசோ பந்தில் போல்டானார். சிறிது நேரத்தில் பாண்டே(44) வெளியேறினார். அடுத்து வந்த ரோஸ் டெய்லர்(5), உத்தப்பா(7) விரைவில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது.
கோஹ்லி கலக்கல்:
பின் விராத் கோஹ்லி, கேமரான் ஒயிட் இணைந்து அதிரடியாக ஆடினர். ரெய்லி வீசிய போட்டியின் 17வது ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்த கோஹ்லி வெற்றியை உறுதி செய்தார்.
பெங்களூரு அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் பெங்களூரு அணி புள்ளி, ரன் ரேட் அடிப்படையில் லயன்சை முந்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வீடியோ Highlights : பெங்களூரு ராயல் சாலஞர்ஸ் Vs லயன்ஸ்
No comments:
Post a Comment