மொகாலி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று மொகாலியில் துவங்குகிறது. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று மொகாலியில் துவங்குகிறது.
இந்திய அணிக்கு பேட்டிங் தான் பலம். சேவக், காம்பிர், முரளி விஜய், ரெய்னா, டிராவிட், லட்சுமண் என அணியின் பேட்டிங் வரிசை, ஆஸ்திரேலியாவை மிரட்டுகிறது. தனது 170 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (13, 837 ரன்), இன்னும் 163 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை எட்டி புதிய சாதனை படைக்கலாம். தற்போது சூப்பர் பார்மில் இருக்கும் சச்சின், இத்தொடரில் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.
தோனி மிரட்டல்:
கடந்த 2008 ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பேற்றார் தோனி. அதற்குப் பின் இந்தியா பங்கேற்ற டெஸ்ட் தொடர்களில் தோல்வியே பெற்றதில்லை. விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களில் 5 வெற்றி, 2 "டிராவை' பதிவு செய்துள்ளது. இன்று துவங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இந்திய அணிக்கு தோனி வெற்றி தேடித் தருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சாதிப்பாரா லட்சுமண்?:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அசத்தக் கூடியவர் லட்சுமண். கடந்த 2001 ம் ஆண்டு கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 281 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார் லட்சுமண். இந்த முறையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமண் ரன் மழை பொழிந்தால், இந்தியா எளிதில் வெற்றியை எட்டலாம்.
இந்திய அணியின் பவுலிங் தான் பலவீனமாக உள்ளது. தொடருக்கு முன் நடந்த பயிற்சி போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், பெரிய அளவில் சாதிக்க வில்லை. சமீபகாலமாக ஜாகிர் கான், இஷாந்த் சர்மாவின் செயல்பாடுகளும் பாராட்டும்படியாக இல்லை. இது இத்தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
ஹர்பஜன் சந்தேகம்:
மொகாலி ஆடுகளம் சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என்பதால், ஹர்பஜன் இந்திய அணியின் முக்கிய பலமாக கருதப்படுகிறார். ஆனால் காலில் ஏற்பட்ட வலி காரணமாக இன்றைய போட்டியில், ஹர்பஜன் பங்கேற்பாரா என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இவர் இடம் பெற வில்லை என்றால், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா இருவருக்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி., எதிர்பார்ப்பு:
கடந்த 2008 ம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பையை இந்தியாவிடம் (2-0) இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அசத்தினர். வாட்சன், காடிச், நார்த் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இவர்களது அபார ஆட்டம், மொகாலி டெஸ்டிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி ஆகியோர் அசத்த வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு, மிரட்டலாக உள்ளது. ஹில்பெனாஸ், ஜான்சன், போலிஞ்சர் ஆகியோர் வேகத்திலும், ஹாரிட்ஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சுழலில் கலக்க உள்ளனர்.
இந்தியா:
தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், சச்சின், டிராவிட், லட்சுமண், ரெய்னா, முரளி விஜய், ஜாகிர் கான், ஹர்பஜன், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா மற்றும் சத்தேஷ்வர் புஜாரா.
ஆஸ்திரேலியா:
பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக்கேல் ஹசி, வாட்சன், காடிச், பிலிப் ஹியுஸ், நார்த், போலிஞ்சர், ஹில்பெனாஸ், ஜான்சன், டிம் பெய்ன், ஜேம்ஸ் பட்டின்சன், பீட்டர் ஜார்ஜ், ஹாரிட்ஸ், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்.
No comments:
Post a Comment