Pages

Saturday, June 5, 2010

இலங்கையுடன் இன்று மோதல்: இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? ஆட்டம்


ஹராரே: முத்தரப்பு லீக் தொடரில் இன்று இந்திய அணி வாழ்வா... சாவா போராட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது. இதில் மிகப் பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி பைனல் வாய்ப்பை பெற முடியும்.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இதன் லீக் சுற்றில் இரண்டு முறை ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த "இரண்டாம் தர' இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று தனது கடைசி லீக் போட்டியில், தில்ஷனின் இலங்கை அணியை சந்திக்கிறது.

சொதப்பும் பேட்டிங்:

துவக்க வீரர்கள் தினேஷ் கார்த்திக், முரளி விஜய்க்கு அநேகமாக இது கடைசி வாய்ப்பாக இருக்கலாம். கடந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த இந்த ஜோடி, இன்று பரிகாரம் தேடினால் நல்லது.

முதல் இரண்டு போட்டிகளில் அசத்திய ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, விராத் கோஹ்லி, கேப்டன் ரெய்னா ஆகியோர் இன்று கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். யூசுப் பதான் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பிரகாசிக்க தடுமாறுகிறார்.

பவுலிங் ஏமாற்றம்:

அனுபவமற்ற இளம் பவுலர்களை வைத்துக் கொண்டு, ரெய்னா தடுமாறுவது தான் பரிதாபமாக தான் உள்ளது. டின்டா, உமேஷ் யாதவ் இருவரும் "முனை மழுங்கிய ஆயுதம் போல', ஏனோதானோ என பவுலிங் செய்கின்றனர். சுழலில் பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா தொடர்ந்து ஏமாற்றுவது அதிக வருத்தம் தான்.

தில்ஷன் பலம்:

முதல் இரு போட்டிகளில் இலங்கை கேப்டன் தில்ஷன், அரைசதம் கடந்து நல்ல "பார்மில்' உள்ளார். தவிர, தரங்கா, மாத்யூஸ், கபுகேதரா, சமர வீரா, சமர சில்வா ஆகியோரும் இன்று சாதிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் பாடு திண்டாட்டம் தான்.

மெண்டிஸ் கூட்டணி:

ஜிம்பாப்வேக்கு எதிரான கடந்த போட்டியில் சுழலில் அசத்திய அஜந்தா மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ் கூட்டணி இன்றும் தொடரலாம். வேகத்தில் குலசேகரா, பெர்னாண்டோ எதிர்பார்த்த அளவில் சோபிக்கவில்லை என்றாலும், ரன்வேகத்தை குறைத்து வெற்றிக்கு உதவுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பைனலுக்கு செல்ல இலங்கை அணி இன்று வெற்றிபெற்றாலே போதும். மாறாக இந்திய அணிக்கு முதலில் பெரிய அளவிலான வெற்றி தேவை. அதற்கு பின் தான் பைனல் வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.

வாய்ப்பு கிடைக்குமா?

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டியில், ஒரு வெற்றி மட்டும் வென்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் 2 வெற்றியுடன் ஜிம்பாப்வே (9 புள்ளி), ஒரு வெற்றியுடன் இலங்கை (5 புள்ளி) அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இன்று இலங்கைக்கு எதிராக, இந்திய அணி "போனஸ்' புள்ளியுடன் வெற்றி பெற வேண்டும். அதேநேரம் இலங்கை அணி, ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைய வேண்டும்.

ஒருவேளை கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வேயை, இலங்கை வீழ்த்தும் பட்சத்தில், இந்தியா உட்பட மூன்று அணிகளும் தலா 9 புள்ளிகளுடன் சமமாக இருக்கும். அப்போது "ரன் ரேட்' அடிப்படையில் பைனலுக்கு செல்லும் அணிகள் முடிவாகும்.
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment