Pages

Saturday, June 12, 2010

பிரமாண்டமாக நடந்தது உலக கோப்பை கால்பந்து போட்டி துவக்க விழா & படங்கள்

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 11: 19-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் துவங்கியது; பிரமாண்டமாக நடைபெற்ற துவக்க விழாவை லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

÷இந்தப்போட்டி ஜூலை 11-ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ் பர்க்கில் உள்ள சாக்கர் சிட்டி மைதானம், எல்லிஸ்பார்க் மைதானம், போர்ட் ஆப் எலிசபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானம், கேப்டவுன் கிரீன் பாயிண்ட் மைதானம், நெல்ஸ் புரூட் மொம்பேலா மைதானம், பிரிட்டோரியாவில் உள்ள லூப்டஸ் வெர்ஸ்பிஃல்ட் மைதானம், போலக்வானேவில் உள்ள பீட்டர் மோகாபா மைதானம், புளோயம் பாண்டீனில் உள்ள பிரீ ஸ்டேட் மைதானம், ரஸ்டன்பர்க்கில் உள்ள ராயல் பாபோகெங் மைதானம், டர்பனில் உள்ள மபிடா மைதானம் ஆகிய 10 பிரமாண்ட மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

÷போட்டிக்காக மொத்தம் 32 அணிகள் ஜோஹன்னஸ்பர்குக்கு வந்துள்ளன. போட்டிகள் துவங்கியுள்ள நிலையில் பல்வேறு நாட்டின் கொடிகள், வீரர்களின் உடைகள் என தென்னாப்பிரிக்கா முழுவதும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கால்பந்து ஜுரம் பரவியுள்ளது. ஜோஹன்னஸ்பர்க் உள்ளிட்ட நகரங்கள் கால்பந்து வீரர்கள், ரசிகர்களால் நிறைந்து காணப்படுகிறது.

÷தங்கள் நாட்டு கால்பந்து அணியினரை உற்சாகப்படுத்துவதற்காக வெளிநாட்டினர் ஏராளமானோர் தென்னாப்பிரிக்காவில் குவிந்துள்ளனர். ரசிகர்களின் வரவால் முக்கிய ஹோட்டல்கள், விடுதிகள் நிறைந்துள்ளன. எங்கெங்கு பார்த்தாலும் கால்பந்து ரசிகர்களால் நகரங்கள் நிரம்பி வழிகின்றன.

÷நகரங்களில் கால்பந்து வீரர்களின் உருவங்கள் பொறித்த பதாகைகள், கால்பந்து திருவிழா குறித்த விளம்பரப் பலகைகள் நிறைந்துள்ளன.

÷போட்டிக்காக 10 நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள், ஸ்டேடியங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

÷இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை போட்டி துவக்க விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மிகப்பெரிய மைதானமான சாக்கர்சிட்டியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்தை அதிரவைத்தது. இதில் 6 ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். நோபல் பரிசுபெற்றவரான தேஷ்மாண்ட் துத்து, தென்னாப்பிரிக்கா கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சள் மற்றும் பச்சை நிற உடைகளை அணிந்து நடமாடினார்.

÷தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் சூமா, பிஃபா தலைவர் செப் பிளாட்டர் உள்ளிட்டோர் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

÷முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, தனது கொள்ளு பேத்தி இறந்ததால், பங்கேற்கவில்லை. இதையடுத்து துவக்க நிகழ்ச்சியின் போது அவரது பேச்சு ஒளிபரப்பப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி பாடகர் ஒருவர், விலங்குகளின் தோல்களை அணிந்து 40 நிமிடங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். இசை நிகழ்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும், இசைக்கலைஞர்களும் பங்கேற்றனர்.

÷இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நடனக் கலைஞர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி என துவக்க விழா கோலாகலமாகவும், உற்சாகமாகவும் நடந்தேறியது. சுமார் 1 லட்சம் ரசிகர்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளை நேரடியாக கண்டுகளித்தனர்.

மைதானத்துக்குள் வர முடியாதவர்கள் மைதானத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட திரைகளில் துவக்க நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். மைதானத்துக்கு ரசிகர்கள் வந்து செல்வதற்குத் தேவையான போக்குவரத்து ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

÷துவக்க விழா நிகழ்ச்சிகளில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றதால் ஜோஹன்னஸ்பர்க் நகரமே குலுங்கியது. ஒரு லட்சம் ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளேயும், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே இருந்தும் துவக்க விழா நிகழ்ச்சிகளைப் பார்த்தனர் என போட்டி அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்கள் போட்டி துவக்க விழாவை ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சியில் நேரடியாகக் கண்டுகளித்தனர்.
நன்றி : தினமணி
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment