Pages

Thursday, June 3, 2010

ஒகேனக்கல்லுக்கு ஒப்புதல் தர கர்நாடகம் புது நிபந்தனை


பெங்களூர், ஜூன் 2: கர்நாடகம்-தமிழகம் இடையே உள்ள ஒகேனக்கல் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணும் சமரசத் திட்டத்தை கர்நாடகம் தயாரித்துள்ளது என்று மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா தெரிவித்தார்.

பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தற்போதைய கொள்ளேகால் தமிழகத்தின் கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. பிறகு கொள்ளேகால் கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டது. இவ்வாறு சேர்க்கப்பட்டபோது ஒகேனக்கலில் காவிரி ஆற்றுப் பகுதியில் எல்லையைப் பிரிக்கும்போது கொள்ளேகால் பக்கம் 200 கிலோ மீட்டர் தூரம் கர்நாடகத்துடனும், எதிர்ப் பக்கத்தில் 200 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்துடனும் சேர்க்கப்பட்டது.

இந்த சமயத்தில் ஒகேனக்கல் பகுதியில் உள்ள தீவு போன்ற பகுதியில் எல்லை சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில்தான் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்கிறது.

இத்திட்டத்தை மேற்கொள்ள கர்நாடகத்துக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அங்கு எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. தமிழக அரசு குடிநீர் திட்டத்தைத் துவக்குவதுபோல் காவிரி ஆற்றில் சிவனசமுத்திரத்தில் மின் திட்டத்தைத் துவக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு 345 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர் மின் உற்பத்தி திட்டத்தை கர்நாடகம் துவக்க தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. கர்நாடகத்தின் இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.

இந்த மின் திட்டத்துக்குத் தேவையான தண்ணீரை காவிரி ஆற்றில் பெற்று அதே நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும். இதனால் தமிழகத்தின் பங்கு நீரில் எந்தவித குறைவும் ஏற்படாது. அதே நேரத்தில் கர்நாடகத்தின் மின் உற்பத்தித் திட்டத்துக்கும் பாதிப்பு இருக்காது. சிவனசமுத்திரத்தில் நீர் மின் திட்டத்தை அமைக்க ஆகும் முழுச் செலவையும் கர்நாடகமே ஏற்கும்.

அங்கு மின்சாரத்தை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளும். தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும். இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம் தயாராக உள்ளது.

தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து முதல்கட்டமாக இரு மாநில தலைமைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை விரைவில் துவங்க உள்ளது.

அதன்பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடைபெறும். தேவைப்பட்டால் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவர். இப்பேச்சுவார்த்தை சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டம் முடிந்தபிறகு நடத்தப்படும். எனவே, ஒகேனக்கல் பிரச்னையை இந்த சமரச திட்டத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இதை ஏற்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

நன்றி : தினமணி
Blog Widget by LinkWithin

No comments:

Post a Comment